2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

புதிய வாய்ப்புக்களைத் தேடும் முயற்சியில் அரசாங்கம்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமது அரசாங்கமானது புதிய துறைகளில் பன்முகப்படுத்தப்பட்ட ஒத்துழைப்புடன்கூடிய நீண்டகால அடிப்படையிலான புதிய வாய்ப்புக்களைத் தேடும் முயற்சியில் உறுதிபூண்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஜேர்மன் அதிபர் அஞ்சலா மெர்கல்லைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய உத்தியோகபூர்வ கூட்டறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, 

பல ஆண்டுகளாக இலங்கை மற்றும் ஜேர்மனி நாடுகளுக்களுக்கிடையே நெருங்கிய மற்றும் சுமூகமான உறவுகள் பேணப்பட்டு வந்திருக்கின்றன. என்னை இங்கு அழைத்ததற்காக மட்டுமன்றி இரு நாடுகளுக்குமிடையில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் பல கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்தமைக்காகவும் ஜேர்மன் அதிபருக்கு என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 

ஜேர்மன் அதிபருடனான எமது கலந்துரையாடலானது இலங்கைக்கான ஜேர்மனின் அபிவிருத்தி உதவிகள் தொடர்பாக அமைந்திருந்தது. அத்துடன், எதிர்காலத்திலும் தொடர்ந்து இந்த உதவிகளை வழங்கும்படியும் நான் கேட்டுக்கொள்கின்றேன். 

எமது அரசாங்கமானது புதிய துறைகளில் பன்முகப்படுத்தப்பட்ட ஒத்துழைப்புடன்கூடிய நீண்டகால அடிப்படையிலான புதிய வாய்ப்புக்களைத் தேடும் முயற்சியில் உறுதிபூண்டுள்ளது. 

இலங்கையில் ஜேர்மன் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறைப் பயிற்சி நிறுவனத்தை ஸ்தாபித்து அதனூடாக திறன் வளர்ச்சியினை மேம்படுத்த ஜேர்மன் அரசு மேற்கொண்டுவரும் பங்களிப்பானது ஒரு சிறந்த முன்மாதிரியாகக் காணப்படுகின்றது.

இலங்கையில் தற்போது அதிகரித்துவரும் பொருளாதார வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கொள்ள ஜேர்மன் முதலீட்டாளர்களுக்கு நாம் இச்சந்தர்ப்பத்தில் அழைப்புவிடுக்கின்றோம். என்னுடைய இந்த விஜயத்தில் ஓர் உயர்மட்ட வர்த்தக முதலீட்டு தூதுக்குழு இணைந்துள்ளது.  

நாம் இலங்கையின் பொருளாதார வாய்புக்கள் மற்றும் சாத்தியமான திறன்கள் தொடர்பான விழிப்புணர்வினை உருவாக்க ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள விசேட மாநாட்டில் பங்குபற்றவும் உள்ளோம். எம்முடைய வணிக தூதுக்குழுவினர் ஜேர்மனின் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடி கூட்டுமுயற்சி வாய்ப்புக்களை அடையாளம் கண்டறியவுள்ளனர். 

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு மேலதிகமாக எம்முடைய மேம்பட்ட கூட்டுறுவானது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், நிலையான வளர்ச்சியில் அமைந்த எரிசக்தித்துறை மற்றும் உயர்கல்வி ஆகியவற்றினைப் பரந்துபட்ட ரீதியில் உள்ளடக்கியதாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X