2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

புலிகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்: ஜனாதிபதிக்கு பிரசன்ன எம்.பி கடிதம்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண சபையினால், அண்மைக் காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பிரிவினையை  வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தங்களுக்கு சார்ப்பாகவே செயற்பட்டனர்.

அவ்வாறானவர்கள், மேற்கண்டவாறு நடந்துகொள்வது, வருத்தத்துக்குரியது என, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, மலேசியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும், பிரசன்ன ரணதுங்க, தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

'தேசிய மற்றும் சர்வதேச ரீதியில், புலிகள் இயக்கத்துக்கு போஷாக்களிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தல்' எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கடந்த மாதம் 29ஆம் திகதியன்று, கனகராயன்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை, இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டிருந்தது. வடக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த வணக்க ஸ்தலங்கள் மற்றும் புத்தர் சிலைகளை அகற்ற வேண்டும் என, வடக்கு மாகாணசபையினால் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை அடுத்தே, மேற்படி புத்தர் சிலை உடைக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு, கொக்கிளாய் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சம்போதி விகாரையை, அகற்ற வெண்டுமெனவும், வடமாகாணசபை உறுப்பினர்களால், கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், புத்தர் சிலையை உடைத்த நபர்களுக்கு எதிராக, இதுவரையில், எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது மிகவும், வருத்தத்துக்குரியதே.

வடமாகாணசபை மற்றும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், புலிகள் இயக்கத்துக்கு போஷாக்களித்து வருகின்றனர். இதனை, அவர்களின் நடவடிக்கைகளே உறுதிப்படுத்துகின்றன. தெற்கில் மாத்திரமா, நல்லிணக்கம் ஏற்படுத்தப்படல் வேண்டும்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நல்லிணக்கத்தைக் குழிதோண்டி புதைத்து வரும்போது, நீங்கள் மௌனம் காப்பது ஏன், புலிகளுக்கு சார்பான புலம்பெயர் தமிழர்கள், கடந்த காலங்களில் மிகவும் பலம் பெற்று வருகின்றமை தெட்டத்தெளிவாகிறது.

பிரபாகரனின் புகைப்படங்களைக் காண்பித்து, நிதி திரட்டும் நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டுக்கு எதிரான, தடை செய்யப்பட்ட அமைப்பொன்று, தேசிய மற்றும் சர்வயதேச ரீதியில் பலமடைந்து வருவது, ஆபத்துக்குரியதே.

இது தொடர்பில் அவதானம் செலுத்தி, நாட்டுக்குள் வியாபிக்கவுள்ள புலிகள் இயக்கத்தினரின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு, கேட்டுக்கொள்கிறேன்' என அக்கடிதத்தில் மேலும் கோரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X