2025 ஒக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை

“படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்றுத் தரவும்”

Editorial   / 2025 ஒக்டோபர் 19 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வா.கிருஸ்ணா

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க சர்வதேச ஊடக அமைப்புகள் முன்வரவேண்டும் என மட்டு.ஊடக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவு தூபியில் ஞாயிற்றுக்கிழமை (19) காலை அனுஷ்டிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ம.நிமலராஜனின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. அதன்பின்னர் தீபச் சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மட்டு ஊடக அமையம் மற்றும் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

யாழில் யுத்தம் உக்கிரமாக இருந்த வேளையில் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் யாழ்ப்பாணத்திலிருந்து தற்றுணிவுடன் செய்திகளை வெளிக்கொணர்ந்தவர் நிமலராஜன்.யாழ். மாவட்ட செயலகத்திற்கு அண்மையில் உள்ள அவரது வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் 2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் திகதி இரவு  சுட்டுப்  படுகொலை செய்யப்பட்டார்.ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகளாகியும் இதுவரையில் படுகொலையாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வில்லை.

மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் பாராமுகமாக இருந்து வந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசும் அதே போக்கில் செயல்பட்டு வருவதாகவும் தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி பெற்றுக்கொடுக்க சர்வதேச ஊடக அமைப்புகள் முன்வரவேண்டும் என இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .