Editorial / 2026 ஏப்ரல் 26 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்
திருகோணமலை மாவட்டத்தின் மூதூரிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் பட்டித்திடல் கிராமம் அமைந்துள்ளது. மல்லிகைத்தீவு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட இப்பூர்வீக கிராமத்தில் விவசாயிகளும் கூலித் தொழிலாளர்களுமே அதிகளவில் வாழ்கின்றனர்.
1987ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கை இராணுவத்தினரின் தாக்குதல்கள் ஆங்காங்கே இடம்பெற்று வந்தன. அந்த வகையில், பட்டித்திடல் கிராமம் 1987.04.26 அன்று இராணுவத் தாக்குதலுக்குள்ளானது. பட்டித்திடல் கிராமத்திற்கு மேற்கே மல்லிகைத்தீவு சந்தியும் வாசிகசாலையும் உள்ளன. அப்பகுதியில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களினால் அச்சமடைந்த மக்கள் ஊரைவிட்டு வெளியேறினர்.
பழிவாங்கும் நோக்குடன் கிராமத்திற்குள் புகுந்த இராணுவத்தினர் மக்களைத் தேடினர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பொன்னம்மா என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர், தாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் தங்களுக்கு ஏதும் நேராது என்ற நம்பிக்கையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். வீடு வீடாகத் தேடி வந்த இராணுவத்தினர், வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதில் காயமடைந்தவர்களை வெட்டியதுடன், உயிருடன் இருந்தவர்களையும் வீட்டிற்குள் வைத்துத் தீயிட்டுப் படுகொலை செய்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் இச்சம்பவத்தில் உயிரிழந்தனர். அவர்களுள் மூன்று கைக்குழந்தைகளும் பள்ளி மாணவர்களும் அடங்குவர். இத்தாக்குதலிலிருந்து கோணன் உலகநாதன் மற்றும் மேரி கணேசபிள்ளை ஆகியோர் மட்டுமே உயிர் தப்பினர்.
சம்பவம் நடந்த அன்று காலை, பட்டித்திடலுக்கு அருகிலுள்ள பிரதான வீதியில் கன்னிவெடித் தாக்குதலில் சில இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். அதன் பின்னணியிலேயே இந்தப் படுகொலை அரங்கேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து நேரில் கண்ட சாட்சியான மேரி கணேசபிள்ளை (அப்போது வயது 50) அன்று வழங்கிய வாக்குமூலத்தில் கூறியதாவது:
"இராணுவம் உள்ளே நுழைந்தவுடன் வீட்டின் பெரியவரும் அவரது மகனும் அவர்களுடன் பேச முயன்றனர். ஆனால், இராணுவத்தினர் உடனடியாகச் சுடத் தொடங்கினர். பெண்களின் அலறல் சத்தம் கேட்டது. காயங்களுடன் தள்ளாடியபடி வெளியே வந்த பெண்கள் மீது பனை ஓலைகளை அடுக்கி, எண்ணெய் ஊற்றி இராணுவத்தினர் தீ வைத்தனர். பின்னர் வீட்டிற்கும் தீ வைத்துவிட்டு லொறியில் ஏறிச் சென்றனர்."
இப்படுகொலை குறித்து உயிர் தப்பிய கோணன் உலகநாதன் 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் விவரித்தபோது:
"யுத்தம் காரணமாகத் தொழில் செய்ய முடியாத சூழல் நிலவியது. சம்பவத்தன்று காலை 6:00 மணியளவில் சில தேங்காய்களை விற்பனை செய்ய மூதூர் சந்தைக்குச் சென்றேன். வழிபாடுகளை முடித்துவிட்டுத் திரும்பும்போது, ஊருக்குள் இராணுவம் புகுந்து சுடுவதாகக் கேள்விப்பட்டேன். ஓடிச் சென்ற என்னை ஊர்மக்கள் தடுத்தனர். மதியம் 1:00 மணியளவில் வீட்டிற்குச் சென்றபோது, எனது மனைவி உட்பட அனைவரும் சுடப்பட்டும் எரிக்கப்பட்டும் கிடந்தனர். அதைப் பார்த்த அதிர்ச்சியில் நானும் அந்த நெருப்பில் பாய முயன்றேன்; மக்கள் என்னைத் தடுத்தனர். மறுநாள் காலை அனைவரது உடல்களும் பொதுக் குழியில் அடக்கம் செய்யப்பட்டன.
முன்னொருமுறை இராணுவம் வந்தபோது எனது அடையாள அட்டையைப் பார்த்துவிட்டுச் சென்றனர். அந்த நம்பிக்கையிலேயே, அன்று ஊர்மக்கள் காடுகளுக்குள் ஓடியபோதும் எனது குடும்பத்தினர் மட்டும் வீட்டிலேயே இருந்தனர். ஆனால், அன்று என்னைத் தவிர என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்," என வேதனையுடன் தெரிவித்தார்.
படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரம்:
|
இல |
பெயர் |
தொழில் / விபரம் |
வயது |
|---|---|---|---|
|
01 |
உலகநாதன் ஜெயப்பிரியா |
- |
06 |
|
02 |
உலகநாதன் ஜெயரதி |
- |
01 |
|
03 |
உலகநாதன் யோகேஸ்வரி |
- |
26 |
|
04 |
கோணன் பத்தினியன் |
கூலித் தொழிலாளி |
42 |
|
05 |
பத்தினியன் சீதையம்மா |
- |
34 |
|
06 |
பத்தினியன் நேசன் |
மாணவன் |
17 |
|
07 |
பத்தினியன் பிரகாஸ் |
மாணவன் |
13 |
|
08 |
பத்தினியன் சோபனா |
மாணவி |
12 |
|
09 |
பத்தினியன் கிருசாந்தி |
மாணவி |
10 |
|
10 |
பத்தினியன் அற்புதராசா |
மாணவன் |
08 |
|
11 |
கோணன் பொன்னம்மா |
- |
60 |
|
12 |
கோணன் மேரி |
- |
23 |
|
13 |
சின்னத்துரை யோகேஸ்வரி |
- |
29 |
|
14 |
சிந்தாமணி பாலமுருகன் |
மாணவன் |
11 |
|
15 |
சிந்தாமணி யோகராசா |
மாணவன் |
14 |
|
16 |
சிந்தாமணி கோகுலேஸ்வரி |
மாணவி |
15 |
|
17 |
சிந்தாமணி செந்தில்மணி |
விவசாயம் |
30 |
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago