2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

’பருத்தித்துறை துறைமுகம் எமக்கு வேண்டாம்’

Freelancer   / 2025 செப்டெம்பர் 16 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், பருத்தித்துறை சுப்பர்மடம் மக்கள் சார்பில் மீனவர் சங்க பிரதிநிதிகள், பருத்தித்துறை நகர பிதா வின்சன் டீ போல் டக்ளஸ் போல் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் ந.திரிலிங்கநாதன் ஆகியோரை நேரில் சந்தித்து பருத்தித்துறை துறைமுகம் அமையும் பட்சத்தில் ஏற்படும் பிரசினைகளை எடுத்துக் கூறி மகஜர்களையும் கையளித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பருத்தித்துறை - சுப்பர்மடம் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க செயலாளர் சிறீவரதன் சுலக்ஸன் மற்றும் பொருளாளர் சிவபாதசுந்தரம் சதீஸ் ஆகியோர் நேற்று திங்கள் கிழமை யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் ஊடக சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தனர்.

இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

பருத்தித்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்வதால் எமது கிராமமே அழிவடைந்து போகும் அபாயம் உள்ளது. துறைமுகம் அமைக்கப்படும் போது அதற்கு மேற்கு பக்கமாக ஏற்படும் கடலரிப்பிற்கு முகம்கொடுத்து அழிவை சந்திக்கும் முதல் கிராமமாக எமது சுப்பர்மடம் மீனவ கிராமமே காணப்படுகிறது.

1000 கோடி ரூபா செலவில் இந்திய அரசாங்கம் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவதற்காக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2018 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முற்பட்ட போது எமது சங்கம் உள்ளிட்ட பல சமூக மட்ட அமைப்புக்களின் குறிப்பாக பருத்தித்துறை துறைமுக சூழலில் காணப்படும் பிரபல பாடசாலைகளின் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டது. மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்தை தாம் ஒருபோதும் நடைமுறப்படுத்த மாட்டோம் என ஆசிய அபிவிருத்தி வங்கி சார்பில் கலந்துரையாடிய அதிகாரிகள் உறுதிபடத் தெரிவித்திருந்தனர்.

அவ்வாறு மக்கள், சமூக மட்ட அமைப்புகள், பாடசாலை சமூகம் என்பவற்றின் எதிர்ப்பினால் கைவிடப்பட்ட துறைமுக திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த இந்திய அரசு முயல்கிறது.

அருகில் உள்ள மீனவ கிராமங்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புகளுடன் கலந்துரையாடவில்லை, எமக்கு எவருக்குமே அறிவிக்காது தன்னிச்சையாக கூட்டம் கூடி முடிவுகளை எடுத்துவிட்டு அபிவிருத்திக்காக கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்செயற்பாடு எமக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கையை நாம் எதிர்க்கிறோம் என்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X