2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

‘பாசாங்கு செய்து ஈற்றில் பழையதைத் தருவீர்கள்’

Editorial   / 2021 ஜனவரி 04 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் யாப்பு நிபுணத்துவக் குழுவுக்கு சி.வி. அதிரடிக் கடிதம்

எங்களுடைய, அதுவும் முக்கியமாகத் தமிழ் மக்களின் கருத்துரைகள் எதுவுமே உங்கள் குறித்த குழுவால் பரிசீலிக்கப்படமாட்டாது என்பது எமது பார்வைபாற்பட்ட கருத்தாகுமெனத் தெரிவித்துள்ள யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதாகப் பாசாங்கு செய்து, ஈற்றில் ஏற்கெனவே தயாரித்த, குறித்த வரைவை வெளியிடுவதே உங்கள் எண்ணம் என்று நாம் கருதுகின்றோம் எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் யாப்பை உருவாக்க அமைக்கப்பட்டிருக்கும் நிபுணத்துவக் குழுவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார். “நீதி அமைச்சினால் பொதுமக்களிடம் இருந்து அரசியல் யாப்பு பற்றிய கருத்துகளைக் கோரியது சம்பந்தமானது” எனத் தலைப்பிட்டு, எழுதியிருக்கும் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

“மேன்மை மிகு மற்றும் படித்த பெரியோர்கள், உங்கள் நிபுணத்துவக் குழுவை அலங்கரித்துக் கொண்டிருப்பினும், எங்களுடைய அதுவும் முக்கியமாக தமிழ் மக்களின் கருத்துரைகள் எதுவுமே உங்கள் குறித்த குழுவால் பரிசீலிக்கப்படமாட்டாது என்பது எமது பார்வைபாற்பட்ட கருத்தாகும்”.

“எமது சந்தேகப்படி, பெரும்பான்மை சமூகத்தவருக்குச் சார்பான ஓர் அரசியல் யாப்பு வரைவை நீங்கள் ஏற்கெனவே தயாரித்து வைத்துக் கொண்டு, பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதாகப் பாசாங்கு செய்து, ஈற்றில் ஏற்கெனவே தயாரித்த குறித்த வரைவை வெளிவிடுவதே உங்கள் எண்ணம் என்று, நாம் கருதுகின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.  

எம்மிடம் கருத்துகள் கோரி, பத்திரிகைகளில் விளம்பரம் செய்தமைக்குக் காரணம், எல்லோரினதும் கருத்துகளையும் கேட்டறிந்தோம் என்று உலகத்துக்குப் பறை சாற்றவே என்று நாம் எண்ணுகின்றோம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் அக்கடிதத்தில், இவ்வாறான எமது கருத்துக்கு வலுச்சேர்ப்பது என்னவென்றால், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எம்மிடம் இருந்து தமிழ்ப் பெயர்களைப் பெற்றபின், முதலில் முற்றிலும் சிங்கள மக்களைக் கொண்ட ஆணைக்குழுவையே நீங்கள் நியமித்தீர்கள். அதுவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இவ்வாறாகப் பெரும்பான்மையினரை மட்டுமே நியமித்தீர்கள். பொதுமக்கள் தமது ஏமாற்றத்தை வெளியிடப் போய், பின்னர் ஒரு தமிழரும் சேர்த்துக் கொள்ளப்பட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, பெரும்பான்மையினருக்கு மட்டுமே சார்பான ஓர் அரசியல் யாப்பையே, இந்த அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. நாட்டின் பல்வேறு வகைப்பாடுகளையும் பன்மைத்துவத்தையும் கருத்தில் எடுத்து, அதற்கேற்ப ஓர் அரசியல்யாப்பு வரைவு கொண்டு வரப்படும் என்று நாங்கள் நம்பவில்லை.

ஏழு மாகாண பெரும்பான்மையினர் தமக்கு இயைபான சட்டத்தை இயற்றி, மற்றைய இரு மாகாண பெரும்பான்மையினரின் உரிமைகளையும் எதிர்பார்ப்புகளையும் பாதிக்கும் வண்ணம் நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக நாம் கணிக்கின்றோம். கடந்த 3,000 வருடங்களுக்கு மேலாகத் தமிழ் பேசும் பெரும்பான்மையிரே இவ்விரு மாகாணங்களிலும் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பதே உண்மை.

ஆனால், புதிய அரசியல் யாப்பைத் தயாரிக்கும் செயற்பாட்டில், நாங்கள் கலந்து கொள்ளவில்லை என்ற அவச்சொல் வராதிருக்கவே, நாம் எமது கருத்துகளை பிறிதோர் ஆவணத்தில் உள்ளடக்கி, இத்துடன் இணைத்துள்ளோம்.

இதில், நாம் கடந்த கால உண்மைகளைச் சுட்டிக் காட்டியுள்ளோம். அரசாங்கம் வேண்டுமெனில், முன்னர் செய்த அதே தவறுகளை இம்முறையும் இழைக்காது, இந்தப் புதிய முயற்சியின் போது, இந்நாட்டின் சகல இன மக்களினதும் எதிர்பார்ப்புகளையும் அரசியல் அபிலாஷைகளையும் நிறைவு செய்யும் விதத்தில், தகுந்த அரசியல் யாப்பு ஒன்றை வரைந்து, பாராளுமன்றத்தில் பதிந்து நிறைவேற்றலாம் எனவும் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .