2025 ஜூலை 05, சனிக்கிழமை

’பிரதமர், அமைச்சரவைக்கு எதிரான மனுக்களை நிராகரிக்க முடியாது’

Editorial   / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சரவை  உறுப்பினர்களாக ஏனையவர்களும் பதவி வகிப்பதற்கு எதிரான தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, எதிர்வரும் ஜனவரி மாதம் 16, 17 மற்றும் 18ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நேற்று (12) திகதி குறிக்கப்பட்டது.

 

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122 பேர் இணைந்து, இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில், இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, பிரதிவாதிகளாக மஹிந்த உள்ளிட்ட தரப்பினர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள், இந்த வழக்கு தொடர்பான நோட்டிஸ் மற்றும் உரிய ஆவணங்கள், உரிய மனுதாரர் தரப்பினரால், பிரதிவாதிகளுக்கு உரிய வகையில் கையளிக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.

இது, ​நீதிமன்றத்தின் சட்டதிட்டங்களை மீறும் செயற்பாடென்று எடுத்துக்காட்டிய மேற்படி சட்டத்தரணிகள், அதனால் இந்த மனுக்களை நிராகரிக்குமாறு கோரினர்.

இதன்போது பதிலளித்த நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, அவ்வாறானதொரு தீர்ப்பை, இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் வழங்க முடியாதென்றும் இந்த எதிர்ப்பை, உரிய சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துமாறும் கூறினார்.

இதன்போது, குறித்த மனுவில், 49 பேரது பெயர்கள் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அவர்களில் 17 பேருக்கு மாத்திரமே நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மன்றின் அவதானத்துக்கு ஏனைய 32 பேருக்கும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் கிடைக்கப்பெறவில்லை என்றும், பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் எடுத்துக் கூறினர்.

இந்நிலையில், இந்த வழக்கின் அனைத்துப் பிரதிவாதிகளுக்கும், வழக்கு தொடர்பான நோட்டிஸ் மற்றும் ஆவணங்களை விநியோகிக்குமாறு, மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளுக்கு, நீதியரசர்கள் குழு உத்தரவிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .