2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பூஜித்தின் ஐ.இராச்சிய பயணம் இரத்தானது

Editorial   / 2018 ஒக்டோபர் 01 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸாரின் பயிற்சியைப் பெறுவதற்காக, ஐக்கிய இராச்சியத்துக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், அப்பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதென, சட்டமும் ஒழுங்கும் பிரதியமைச்சர் நளின் பண்டார, நேற்று (30) தெரிவித்தார்.

பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பொலிஸ்மா அதிபர் மீது, விசாரணைகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஐ.இராச்சியத்துக்காக அவர், நேற்றுப் புறப்படவிருந்தார். 

எனினும், உயர்மட்ட உத்தரவைத் தொடர்ந்து, அவரது பயணம் இரத்துச் செய்யப்பட்டது என, அரசாங்கத் தகவல்கள் தெரிவித்தன. 

பொலிஸ்மா அதிபரோடு இணைந்து, பிரதியமைச்சர் நளின் பண்டார, அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன, சிரேஷ்ட உதவிச் செயலாளர் எம். சூரியப்பெரம, பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் சேனாரத்ன ஆகியோரும், பொலிஸ்மா அதிபருடன் செல்லவிருந்தனர். 

பிரித்தானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே, இப்பயிற்சி இடம்பெறவிருந்தது. 

இப்பயிற்சி, இன்னொரு தினத்துக்கு மீள ஒழுங்குபடுத்தப்படுமென, பிரதியமைச்சர் பண்டார தெரிவித்தார். 

ஆனால், ஐ.இராச்சியத் தகவல்களின்படி, இந்தப் பயிற்சி தொடர்பாக, ஐ.இராச்சியத்தின் வாழும் தமிழ் மக்களின் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்தே, இந்தப் பயிற்சியை இரத்துச் செய்யும் முடிவு எடுக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கையின் பொலிஸார், சிறுபான்மையினத்தவர் மீது சித்திரவதைகளைக் கொண்டு நடத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டுக் காணப்பட்ட நிலையில், அவரது விஜயத்தின் போது போராட்டங்களை நடத்துவதற்கு, ஐ.இராச்சியத்திலுள்ள தமிழர்கள் முடிவுசெய்திருந்ததோடு, இலங்கையோடு தொடர்புகளைக் கொண்ட மாதங்கி அருட்பிரகாசம் என்ற பாடகியும், ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன. 

இதைத் தொடர்ந்தே, பயிற்சித் திட்டத்தைப் பிற்போடும் முடிவை, ஐ.இராச்சியத்தின் வெளிநாட்டுச் செயலகம் எடுத்தது என, ஐ.இராச்சிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இப்பயிற்சி, மீள ஏற்பாடு செய்யப்படுமா என்பது, இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X