2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பெண்ணின் கை அகற்றப்பட்ட சம்பவம்; சுகாதார அமைச்சர் விசாரணைக்கு ​உத்தரவு

Editorial   / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்ணொருவர் கர்ப்பப்பையை அகற்றுவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அப்பெண்ணின்  கையொன்று அகற்றப்பட்டுள்ளமைத் தொடர்பில், உடனடி விசாரணை செய்ய வேண்டுமென, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சரால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைப் பிரிவினருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக விசேட நிபுணர் குழுவொன்று மாரவில வைத்தியசாலைக்குச்  சென்றுள்ளனர்.

இது தொடர்பில் கருத்துத்  தெரிவித்துள்ள குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர்  வைத்தியர் நிர்மலா லோகநாதன், 78 வயதுடைய பெண்ணொருவர், ஜுலை மாதம் 20ஆம் திகதி தனது கர்ப்பப்பையை அகற்றுவதற்கான சத்திரசிகிச்சைக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது இவருக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர்கள், குறித்த நோயாளியின் வயது, ஏனைய நோய் தன்மைகள் குறித்தும் இதனால் சத்திரசிகிச்சையின் போது ஏற்படும் ஆபத்து குறித்தும் இந்தப் பெண்ணுக்கும் அவரது மகனுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.

எனினும் ​நோயாளியான பெண்ணும் அவரது குடும்ப உறுப்பினர்களும் சத்திரசிகிச்சைக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, ஜூலை 22ஆம் திகதி குறித்த பெண்ணின் கர்ப்பப்பை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதுடன், ஏற்கெனவே வைத்தியர்களின் எச்சரிக்கை​க்கமைய, பெண்ணின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டவுடன், அவர் மாரவில வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் இரத்த உறைவு காரணமாக, அப்பெண்ணின் ஒரு கை நீல நிறமாக மாறி செயலற்றுப் போயுள்ளது.

இதனையடுத்து, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டதுடன் 24ஆம் திகதி செயலற்ற கையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெண்ணின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாலேயே அவரது கை அகற்றப்பட்டதாகவும், குறித்த சத்திரசிகிச்சை நிறைவடைந்து 14 நாள்கள் கடந்துள்ள நிலையிலும், அப்பெண் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே சிகிச்சைப்​ பெற்று வருவதாகத் தெரிவித்துள்ள பணிப்பாளர், இந்தச் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை ஊடாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .