2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பெற்றக் குழந்தையைக் கொன்று காணாமல் ஆக்கிய தாய் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

6. முஹம்மது முஸப்பிர், ஜூட் சமந்த


நான்கு வயதுடைய தனது மகளைக் கொலை செய்து, உடலை கலாஓயா ஆற்றில் வீசி காணாமல் ஆக்கச் செய்த சம்பவம் தொடர்பில் அச்சிறுமியின் தாயான 21 வயதுடைய பெண்ணைக் கைது செய்த, கருவலகஸ்வெவ பொலிஸார் சந்தேகநபரை  சாலியவெவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

சாலியவெவ நீலபெம்ம குடியேற்ற திட்டத்தின் ஒலிமடுவ கிராமத்தில் வசித்த 4 வயது  சிறுமியே இவ்வாறு கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டவராவார்.

கடந்த மாதம் 30ம் திகதி காலை 7.30 மணியளவிலிருந்து இச்சிறுமி காணாமல் போயிருந்ததோடு, இச்சிறுமியைத் தேடும் பணிகள் கடந்த நான்கு தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடற்படையினர், விஷேட அதிரடிப் படையினர், சிவில் பாதுகாப்பு படையினர், பொலிஸார், பொலிஸ் நாய்கள் மற்றும் பிரதேச மக்களும் இணைந்து இச்சிறுமியைத் தேடும் பணிகளை முன்னெடுத்து வந்த போதிலும் அச்சிறுமி இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை. ஐந்தாவது தினமாக அச்சிறுமியைத் தேடும் பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டது.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் சாலியவெவ பொலிஸிலிருந்து கருவலகஸ்வெவ பொலிஸாரிடம் ஒப்படைக்க புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் நடவடிக்கை மேற்கொண்டதாகவும், அதன் பின்னர் கருவலகஸ்வெவ பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. 

இதற்கமைய , சிறுமியின் தாயிடம் கருவலகஸ்வெவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஜயலத் நேற்று சனிக்கிழமை மாலை மேற்கொண்ட விசாரணையின் போது இக்கொலையின் விபரங்கள் வெளிவந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 30ம் திகதி சிறுமி பாலர் பாடசாலை செல்ல ஆயத்தமான போது ஏற்பட்ட கோபத்தினால் அச்சிறுமியை காலால் உதைத்து தாக்கியதாகவும், சந்தேக நபரான தாய் கூறியுள்ளார். அப்போது சிறுமி நினைவிழந்ததாகவும், இதன்போது சிறுமி மயக்கமடைந்ததாகவும், இதனையடுத்து அவளது முகத்தில் நீரைத் தெளித்த போதும், சிறுமி சுயநினைவுக்கு திரும்பாமையால், மகளைத் தூக்கிச் சென்று கலா ஓயா ஆற்றில் வீசியதாகவும் தாய் பொலிஸாரிடம் மேலும் கூறியுள்ளார்.

இதனையடுத்து  கைது செய்யப்பட்ட சந்தேகநப​ரான தாய் மேலதிக விசாரணைகளுக்காக சாலிய வெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சிறுமியின் சடலத்தை தேடும் நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .