2025 ஜூலை 09, புதன்கிழமை

‘ பொதுத் தேர்தலை எவராலும் தடுக்க முடியாது’

Editorial   / 2018 நவம்பர் 12 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி பொதுத்தேர்தல் நடைபெறும். இதனை எவராலும் தடுக்க முடியாது. தேர்தல் என்பது மக்களுக்குள்ள உரிமையாகும். இதனை நீதிமன்றத்தால் கூட சவாலுக்குட்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்குச் செல்லத் தாம் எடுத்திருந்த தீர்மானம் குறித்து விரைவில் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளைச் சந்தித்து விளக்கமளிக்கப்போவதாகவும்

தெரிவித்தார். 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ,

உத்தியோகபூர்வமாக நேற்று (11) இணைந்துகொண்டார்.  

கொழும்பு, விஜேராமவில் உள்ள அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன்போது மேலும் தெரிவித்த அவர், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது ஒன்றிணைந்த எதிரணியாக செயற்பட்டிருந்த எமக்கு அரசாங்கத்தை விரைவாக கவிழ்ப்பதும், ​ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதுமே பிரதான திட்டமாக இருந்தது என்று தெரிவித்த அவர், நல்லாட்சி அரசாங்கத்தில் எங்களை படுகொலை செய்ய முயற்சித்தார்கள் என்றார். 

கடந்த அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு, மக்கள் தீர்ப்புக்குச் செல்ல வேண்டும் என்பதே எமது திட்டமாக இருந்தது. நாம் எடுத்திருக்கும் இந்தத் தீர்மானம் தவறா? சரியா? என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களிடமே இருக்கிறது. மக்களுக்குள்ள இந்த உரிமையை நீதிமன்றத்தால் கூட சவாலுக்குட்படுத்த முடியாது. அவ்வாறு செய்யப்படுமாயின் அது எமது நாட்டின் இறைமைக்கு எதிரானது எனவும், அது மக்களுக்கு எதிரான செயற்பாடாக அமையும் எனவும் தெரிவித்தார்.  

ஜனநாயகத்தை நிலைநிறுத்துவது தேர்தலாகும். தேர்தல் என்றால் ஏன் அச்சப்படுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. எங்களுக்குத் தேர்தல் குறித்த அச்சம் கிடையாது. தேர்தலுக்கு முகங்கொடுக்க நாம் தயாராக இருக்கிறோம். தேர்தலில் கண்டிப்பாக வெற்றிபெறுவோம் எனவும் தெரிவித்தார். 

இதேவேளை, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து, புதிய கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்திருப்பதாக தெரிவித்தார். 

நாடாளுமன்றம் கலைத்தமை ஜனநாயகத்துக்கு எதிரானது என எதிர்க்கட்சியினர் தெரிவிக்கிறார்களே என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கும் தேர்தலுக்குச் செல்வதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது. எது ஜனநாயகம் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும் என்றார்.  

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சியினர், உயர் நீதிமன்றம் செல்ல உள்ளனர் இந்நிலையில், பொதுத் தேர்தல் நடைபெறுமா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, “நாங்களும் எங்களுடைய சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடியுள்ளோம். என்றபடியால், பொதுத்தேர்தலை எவராலும் தடுக்க முடியாது” என்றார். 

சர்வதேச நாடுகள் கூட இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து அவதானம் செலுத்தியிருக்கின்றன. இந்நிலையில், சில நாடுகள் விமர்சனங்களையும் முன்வைத்திருக்கின்றன என்ற கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், மக்களிடம் சென்று மக்களின் ஆணையைக் கேட்பதையே சர்வதேச நாடுகள் ஜனநாயகம் என ஏற்றுக்கொண்டுள்ளன. ஆகவே, எமது முடிவை ஜனநாயகத்துக்கு விரோதமானது எனக் கூற முடியுமா? ஜனாதிபதியும் எமது கட்சியின் தலைவர்களும் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளைச் சந்தித்து எமது தீர்மானம் குறித்து விளக்கமளித்து வருகின்றனர் என்று பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அவர்கள் கண்டிப்பாக எமது தீர்மானம் குறித்து புரிந்துகொள்ள வேண்டும். நானும் அவர்களை விரைவில் சந்தித்து, எமது தீர்மானம் குறித்து விளக்கமளிக்க உள்ளேன் எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .