2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

முச்சக்கரவண்டிக்குப் பதிலாக குறைந்த விலைக்கு நம்நாட்டில் வாகனம்

Kogilavani   / 2016 ஜூன் 02 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

முச்சக்கரவண்டியை விடக் குறைந்த விலையில், நான்கு சக்கர வண்டியொன்றைக் கொள்வனவு செய்வதற்கு வழிசமைத்துக்கொடுப்பதாக, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அறிவித்திருந்தார். இந்நிலையில், அவ்வாகனம் தொடர்பான விவரங்கள், தற்போது வெளியாகியுள்ளன.

நான்கு சக்கர வண்டி என்று அமைச்சர் குறிப்பிட்டிருந்த போதிலும், அது எவ்வகையான வாகனம் என்று அறிவித்திருக்கவில்லை. இருப்பினும், மிகச் சிறியரக கார் ஒன்று தொடர்பிலேயே அமைச்சர் அறிவித்திருந்தார் என்ற தகவல்கள், தற்போது கசிந்துள்ளன.

3 இலட்சம் ரூபாய்க்கு கொள்வனவு செய்யக்கூடிய இந்தக் கார், உலகின் மிகக் குறைந்த விலையில் கொள்வனவு செய்யக்கூடிய கார் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையில், உலகில் மிகக் குறைந்த விலையில் காணப்படும் டாட்டா நெனோ ரகக் காரை இலங்கையில் கொள்வனவு செய்ய வேண்டுமாயின், அதற்கு 1.4 மில்லியன் ரூபாய் தேவைப்படுகிறது.

இருப்பினும், அதனை விட பன்மடங்கு குறைந்த விலையில் தற்போது இலங்கையில் விற்பனைக்கு வரவுள்ள மேற்படி நான்கு சக்கரக் காரானது, கொட்ரிசைக்கிள் (Quadricycle) என்றே அழைக்கப்படுகிறது.

இந்த கொட்ரிசைக்கிளின் வரலாறு, 1896ஆம் ஆண்டுக் காலத்துக்குரியதாகும். உலகப் பிரசித்திபெற்ற போர்ட் நிறுவனமானது, 1896ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் திகதியன்றே, தனது முதலாவது கொட்ரிசைக்கிளைத் தயாரித்தது. தற்போது, இந்தியாவின் பஜாஜ் நிறுவனமானது, தனது கொட்ரிசைக்கிள் உற்பத்தியை Qute என்ற பெயரில் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை, 2 ஆயிரம் அமெரிக்க டொலர்களாகும். இலங்கை ரூபாய்ப்படி, 3 இலட்சம் மாத்திரமேயாகும்.

பஜாஜ் நிறுவனத்தின் கொட்ரிசைக்கிள் ஞரவந ஆனது, தற்போது இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, அவ்வாகனம் தொடர்பான தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெகு விரைவில், இலங்கை வாழ் பொதுமக்கள், இந்த கொட்ரிசைக்கிளைக் கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும் என்று அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இவ்வாகனத்துக்கான வரியுடன் கூடிய விலை, இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது.

மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த வாகனமானது, நகரப் பாவனைக்காக மாத்திரமே தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், நான்கு பேர் மாத்திரமே பயணிக்க முடியும் என்பதுடன், ஒரு லீற்றர் பெற்றோலில் 36 கிலோமீற்றர் தூரம் செல்ல முடியும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .