2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

மண்சரிவு அபாயம்: 390 பேர் வெளியேற்றம்

Kanagaraj   / 2016 மே 23 , பி.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொத்மலை, பெல்மதுளை மற்றும் கிரிந்திவெல ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாக, 390 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பூண்டுலோயா சீன் தோட்டத்தில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக, 29 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர், கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகள், தோட்ட நிர்வாகம் மற்றும் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.
இத்தோட்டத்தில் 6, 7, 8ஆம் ஆகிய இலக்க லயன் தொகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, குடியிருப்புப் பின்பகுதியில் மண்மேடுகள் மற்றும் கற்பாறைகள் சரிந்து விழக் கூடிய நிலை காணப்படுகின்றது.

இதனால், 6ஆம் இலக்க லயன்தொகுதியில் 10 குடும்பங்களும், 7ஆம் இலக்க லயன்தொகுதியில் 7 குடும்பங்களும், 8ஆம் இலக்க லயன் தொகுதியில் 10 குடும்பங்களும், தற்காலிகக் கூடாரங்கள் இரண்டில் வாழ்ந்த இரண்டு குடும்பங்கள் அடங்கலாக, 29 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 35 சிறுவர்களும் 6 மாத சிசுக்கள் இருவரும் அடங்குகின்றனர்.

மேலும், அதிகமான பெண்கள் தங்கியிருப்பதனால், போதியளவான மலசலக்கூட வசதிகள் இன்மையால் அவர்கள், பல்வேறான அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதேவேளை, 2015ஆம் ஆண்டு பெய்த கடும் மழையினால்,  இந்தக் குடியிருப்புகளில் வாழ்ந்த மக்களை, பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு,  அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவுறுத்தியிருந்தது.

அறிவிப்பு விடுக்கப்பட்டு ஒருவருட காலமாக எவ்விதமாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத காரணத்தினாலேயே, தங்களுடைய உயிர்களைக் கையில் பிடித்துக்கொண்டு, இக்குடியிருப்பிலேயே வாழ்ந்து வந்ததாகவும் இம்முறை, அனர்த்த அபாயம் அதிகரித்துவிட்டதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, பெல்மதுளை பொரோணுவ தோட்ட மேற்பிரிவு இலக்கம் - 03 லயன் அறைகளில் வசித்துவந்த 35 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
மண்சரிவு அபாயம் காரணமாகவே இவர்கள், இடம்பெயர்ந்துள்ளதாக இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

இப்பகுதியில், 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட கட்டட ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையின் போது, இவ்விடம் மண்சரிவுக்கு முகங்கொடுக்கக்கூடிய இடமென்று இனங்காணப்பட்டது.

அப்பகுதியிலிருந்து வெளியேறியோர், பொரோணுவ தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குருநாகல் கிரிந்திவெல, உடவெல கல்உடகந்தையில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கிருந்து சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது,

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .