2026 மே 01, வெள்ளிக்கிழமை

முத்துநகர் விவசாயிகள் கறுப்பு நாளாக ஆர்ப்பாட்டம்

Editorial   / 2026 மே 01 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஹஸ்பர் ஏ.எச்

திருகோணமலை - பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்துநகர் விவசாயிகள், சர்வதேச தொழிலாளர் தினமான இன்று (01.05.2026), கறுப்பு ஆடை அணிந்து பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் திருகோணமலை - கண்டி பிரதான வீதியின் முத்துநகர் சந்தி அருகே இடம்பெற்றது.

கடந்த பல வருடங்களாகத் தமது வயல் காணிகளுக்கான தீர்வினைக் கோரிவரும் இவ்விவசாயிகள், இம்முறை மே தினத்தைக் கறுப்பு நாளாகக் கருதி வீதியில் இறங்கினர். விவசாய காணிகளைச் சூறையாடி, தனியார் நிறுவனங்களுக்குச் சூரிய மின்சக்தி உற்பத்திக்காக வழங்கியதைக் கண்டித்து இந்த விழிப்புணர்வுப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“எமது நிலம் எமக்கு வேண்டும்”, “விவசாயிகளுக்கு நீதி வேண்டும்”, “நலிவடைந்த உழவர்களுக்கு IMF நீதியைப் பெற்றுத் தா”, “முத்துநகர் விவசாய காணிகளை மீண்டும் ஒப்படை” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு 50-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளின் குமுறல்:

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு கூறினர்:

“அன்பான உறவுகளே, இன்று மே முதலாம் திகதி - உலகத் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த செந்நாள்! ஆனால், தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசானது முத்துநகர் விவசாயிகளின் நிலங்களையும் உரிமைகளையும் பறித்து, இந்நாளை எமக்குக் கறுப்பு நாளாக மாற்றியுள்ளது.

இலங்கையின் ஆளுகை மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு குறித்து மதிப்பீடு செய்த சர்வதேச நாணய நிதியம் (IMF), முறையான ஆளுகை இல்லாவிடில் பொருளாதார வளர்ச்சி நிலைக்காது என்பதை வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, ஏழை மற்றும் நலிவடைந்த மக்களுக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் சமூக நிலைத்தன்மை பேணப்பட வேண்டும் என்றும் IMF சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால், இன்றைய அரசு நில உரிமையைப் பெரும்பான்மைக்கும், கண்ணீரைச் சிறுபான்மைக்கும் பரிசாக வழங்குகிறது. கடந்த 55 வருட காலத்தில் பல ஜனாதிபதிகளை நாங்கள் கண்டுள்ளோம். அவர்கள் எமக்கு இத்தகைய நெருக்கடிகளைத் தந்ததில்லை. குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் விவசாய மானியங்கள் எமக்குக் கிடைத்தன. ஆனால், இந்த அரசு எம்மை அவமானப்படுத்தி, எமது பூர்வீக நிலங்களிலிருந்து அராஜகமாக வெளியேற்றியுள்ளது.

முந்தைய அரசுகளுக்கு எதிராக எம்மைத் தூண்டிவிட்டு, எமக்காகப் போராடுவதாகக் கூறி நில உரிமையைப் பெற்றுத் தருவோம் என்று வாக்குறுதியளித்த அருண் ஹேமச்சந்திர போன்றவர்கள், இன்று ஆட்சிக்கு வந்ததும் அதே ஏகாதிபத்தியச் சக்திகளிடம் எமது வயல் நிலங்களைத் தாரைவார்க்கிறார்கள். இது கண்ணை விற்று ஓவியம் வாங்குவதற்கு ஒப்பானது. மேலும், அவர் எமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தவறான தகவல்களை வழங்கி வருகின்றார்.

கந்தளாயில் 11,000 ஏக்கர் அரச காணிகளைப் பெரும்பான்மை மக்களுக்கு வழங்கிய அருண் ஹேமச்சந்திர அவர்களுக்கு நாம் கேட்கும் கேள்வி இதுதான்: ‘முத்துநகர் விவசாயிகள் 1,200 ஏக்கரில் கடந்த 55 வருடங்களாகக் கஞ்சாவா பயிரிட்டார்கள்?’

IMF அதிகாரிகளே! எங்கே இருக்கிறது சமூக நிலைத்தன்மை? ஜனநாயக ரீதியாகப் பலமுறை கோரிக்கை விடுத்தும் எமக்கு நீதி கிடைக்கவில்லை. ஆகவே, வங்குரோத்து நிலையில் இருந்த இலங்கையை மீட்க முயற்சிப்பது போல, கண்ணீரில் வாழும் முத்துநகர் மக்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றுங்கள். அரசு செய்யாததை IMF செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்.

காஸா, பாலஸ்தீனம் மற்றும் ஈரானுக்காகக் குரல் கொடுக்கும் உங்கள் நேர்மை எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல, உங்களோடு வாழும் சக சகோதரர்களாகிய எமக்கும் கொஞ்சம் குரல் கொடுங்கள். எமது ஒற்றுமையே எமது பலம்!”


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .