Editorial / 2026 மார்ச் 17 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்
இக்காலத்தில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது பலருக்கு ஒரு கௌரவமாகவும், பொழுதுபோக்காகவும் மாறியுள்ளது. குறிப்பாக, அதிக விலை கொடுத்து பூனைகளை வாங்கி, அவற்றுக்கு நவீன மருத்துவ வசதிகள் மற்றும் விலையுயர்ந்த உணவுகளை வழங்கிப் பராமரிப்பவர்களை நாம் அதிகம் காண்கிறோம். ஆனால், இவற்றுக்கு மத்தியில் மட்டக்களப்பு - ஓட்டமாவடி பகுதியில் ஒரு சாதாரண நாட்டுப் பூனை, ஒரு மீன் வியாபாரியின் தொழிலுக்குப் பெரும் உதவியாக இருந்து வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட தியாவட்டவான் பிரதான வீதியில் 'AFH' எனும் பெயரில் மீன் கடையை நடத்தி வருபவர் முகம்மட் முஸ்தபா புஹாரி. இவர் மீனவர்களிடமிருந்து மொத்தமாக மீன்களைக் கொள்வனவு செய்து, உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் தனது கடையை ஆரம்பித்த புஹாரிக்கு, ஆரம்பத்தில் எலிகளால் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக ரெஜிபோம் பெட்டிகளில் அடைத்து வைக்கப்படும் மீன்களை, காட்டு எலிகள் கடித்துக் குதறியதுடன் பெட்டிகளையும் சேதப்படுத்தின. இதனால் அவருக்குப் பெருமளவில் நிதி நஷ்டம் ஏற்பட்டது. எலிகளைக் கட்டுப்படுத்த அவர் மேற்கொண்ட பல முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.
இந்த இக்கட்டான நிலையில், ஒருநாள் அவரது கடைக்கு முன்னால் சில பூனைகள் வந்து நின்றன. சில நாட்களில் ஏனைய பூனைகள் சென்றுவிட, ஒரு பெண் பூனை மட்டும் கடையிலேயே தங்கியது. அந்தப் பூனையை விரட்டாமல் புஹாரி அதற்கு உணவளித்துப் பராமரித்தார். அன்றிலிருந்து அந்தப் பூனை புஹாரியின் கடைக்கு ஒரு 'நம்பிக்கைக்குரிய ஊழியராக' மாறியது.
இந்த பூனையின் வருகைக்குப் பிறகு, கடையில் எலிகளின் தொல்லை முற்றாக நீங்கியுள்ளது. வேட்டையாடுவதில் திறமை காட்டும் இந்தப் பூனை, கடையிலுள்ள மீன்களைத் தானாகத் திருடி உண்பதில்லை என்பதுதான் இதன் சிறப்பம்சமாகும். உரிமையாளர் புஹாரி கொடுக்கும் மீன்களை மட்டுமே அது உணவாகக் கொள்கிறது.
தற்போது அந்தப் பூனை ஈனும் குட்டிகளை வளர்ப்பதற்கும் அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஆழமான பிணைப்புக்கு உதாரணமாகத் திகழும் இந்தப் பூனையின் உதவி, தனது தொழிலை மீண்டும் சிறப்பாக முன்னெடுக்கக் காரணமாக அமைந்துள்ளதாக புஹாரி மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.




9 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
1 hours ago