2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

’மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சுயாதீன விசாரணை வேண்டும்’

Freelancer   / 2025 ஓகஸ்ட் 31 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில், அண்மையில் மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் மனித என்புக்கூடுகள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் என்பன கடந்த கால மனித உரிமை மீறல்களின் அளவையும், நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுயாதீன விசாரணைகளுக்கான அவசரத் தேவையையும் வலியுறுத்துகின்றன என்று இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே பிராஞ்ச் தெரிவித்துள்ளார்.

சர்வதேச காணாமல்போனோர் தினமான நெரூர் அறிக்கையொன்றை வெளியிட்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச காணாமல்போனோர் தினம் அனைத்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நினைவை மதிக்கும் ஒரு நாள் என்றும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் இந்த மீறலை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளவோ, மன்னிக்கவோ அல்லது மறக்கவோ கூடாது என்பதை நினைவூட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதி, உண்மை மற்றும் இழப்பீடுகள் ஆகியவை நல்லிணக்கம், நிறுவனங்கள் மீதான நம்பிக்கை மற்றும் இலங்கையர்கள் நீண்டகாலமாகத் தேடிக்கொண்டிருக்கும் நிலையான அமைதியின் பிரிக்க முடியாத அடித்தளங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் எதிர்கொள்ளும் கண்காணிப்பு, அச்சுறுத்தல்கள், மிரட்டல் மற்றும் பழிவாங்கல்கள் குறித்தும் ஐக்கிய நாடுகள் சபை கவலை கொண்டுள்ளது.

இந்தநிலையில், தங்கள் உரிமைகளைப் பயன்படுத்துவதில் ஈடுபட்டுள்ள அனைவரும் தண்டிக்கப்படக்கூடாது என்றும், பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நாளிலும், ஒவ்வொரு நாளும், தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடும் ஒவ்வொரு குடும்பத்துடனும் ஐக்கிய நாடுகள் சபை உறுதுணையாக நிற்கின்றது.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்கள் உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீண்டும் நிகழாததற்கான உத்தரவாதங்களுக்கான உரிமைகளை உணர முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த நம்பகமான, சுயாதீனமான விசாரணைகளை ஆதரிப்பதில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து உறுதியாக இருக்கின்றது என்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே பிராஞ்ச்  குறிப்பிட்டுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X