2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய முடியுமா?

Freelancer   / 2025 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ஒருவரை கைது செய்யும் அதிகாரம், இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான பிரதீபா மஹனாமஹேவா சர்வதேச ஊடகத்திடம் கருத்து தெரிவித்துள்ளார்.

''ஜனாதிபதி ஒருவருக்கு விசேட சிறப்புரிமை உள்ளது என 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் 7வது சரத்தில் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்புரிமையின் பிரகாரம், ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக அவரது பதவி காலத்தில் எந்தவொரு சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றை பதிவு செய்ய முடியாது என 35/1 சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது." என்றார்.

எனினும், அரசியலமைப்பின் 19வது திருத்தத்திற்கு அமைய, அவரது பதவிக் காலத்திற்குள் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கும் பட்சத்தில், அவருக்கு எதிராக சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்று தாக்கல் செய்ய முடியாத பட்சத்திலும் அவருக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்ய முடியும் என அவர் விளக்குகிறார்.

''ஜனாதிபதி ஒருவரின் பதவிக் காலத்திற்குள் மாத்திரமே சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றை தாக்கல் செய்ய முடியாது. அவரது பதவியிலிருந்து அவர் விலகியதன் பின்னர் அல்லது ராஜினாமா செய்த பின்னர் அவர் பதவிக் காலத்தில் விடுத்த சிவில் அல்லது குற்றவியல் தவறுகளுக்கு வேறொரு தரப்பினரால் வழக்கு தாக்கல் செய்ய முடியும். அதில் எந்தவித தடங்கல்களும் இல்லை. நீதிமன்றத்தில் பீ (B) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே முன்னாள் ஜனாதிபதியின் பிரத்யேக செயலாளர் மற்றும் செயலாளர் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கோட்டை நீதவானின் அனுமதியுடனேயே முன்னாள் ஜனாதிபதியிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது." என அவர் தெரிவித்தார்.

அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்பது தெரியவரும் பட்சத்தில், போலீஸாரினால் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் பிணை அவருக்கு வழங்க பொலிஸாருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் கூறுகிறார்.

"அதனாலேயே நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றார். 1999ம் பிணை சட்டத்திற்கு அமைய அவருக்கு பிணை கோரிக்கை முன்வைக்கப்படும்.'' எனவும் அவர் குறிப்பிடுகின்றார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X