Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 செப்டெம்பர் 12 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
முள்ளிக்குளம் கிராம மக்கள் அகதி வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கக் கடற்படையினரும் வனவளத்திணைக்களத்தினரும் இணைந்து முள்ளிக்குளம் கிராமத்தை முற்றாக அபகரித்துவைத்துள்ளதாக தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் குற்றம் சாட்டினார்
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) அன்று இடம்பெற்ற தேசிய கணக்காய்வு திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டினார்.
மேலும், முள்ளிக்குளம் கிராமத்தில் வாழ்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு நிலவிய அசாதாரண நிலைமை காரணமாக தங்களுடைய பூர்வீக வாழ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்தனர். சுமார் 400 தமிழ்க் குடும்பங்களே இவ்வாறான இடப்பெயர்வைச் சந்தித்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் ஒரு தசாப்த காலத்துக்குப் பின்னர் கடந்த 2002ஆம் ஆண்டு அவர்களுடைய சொந்த இடமான முள்ளிக்குளத்தில் மீள் குடியேற்றப்பட்டனர். இவ்வாறு தமது சொந்த இடத்தில் மீள் குடியேறிய மக்களுக்கு அக்காலப்பகுதியில் 150 நிரந்தர வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மொத்தமாக 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேறி வாழ ஆரம்பித்தனர். அது நீடிக்கவில்லை. மீள் குடியேறி வெறுமனே ஐந்து வருடங்களிலேயே கடந்த 2007ஆம் ஆண்டு மீளவும் இடம்பெயர வேண்டிய அவலநிலைக்கு முள்ளிக்குளம் கிராம மக்கள் தள்ளப்பட்டனர்.இவ்வாறான சூழ்நிலையில் யுத்தம் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் முள்ளிக்குளம் மக்கள் தமது பூர்வீக வாழ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்து இரண்டு தசாப்த காலங்களை அண்மித்துள்ள நிலையில் இதுவரை முள்ளிக்குளம் கிராம மக்களை அவர்களுடைய சொந்த இடத்தில் மீள் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இத்தகைய சூழலில் முள்ளிக்குளம் கிராம மக்கள் அயல் கிராமங்களான மலைக்காடு மற்றும் காயாக்குழி உள்ளிட்ட கிராமங்களில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக மலைக்காடு, காயாக்குழி ஆகிய கிராமங்களில் 250 இற்கும் மேற்பட்ட முள்ளிக்குளம் மக்கள் அகதி என்னும் அவல வாழ்வை வாழ்கின்றனர். இது தவிர 175 வரையான குடும்பங்கள் இந்தியாவின் அகதி முகாம்களில் வாழ்வதாகவும் மேலும் பல குடும்பங்கள் ஆங்காங்கே சிதறி வாழ்வதாகவும் முள்ளிக்குளம் கிராம மக்கள் முறையிடுகின்றனர்.
இவ்வாறாக முள்ளிக்குளம் கிராம மக்கள் அகதி வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கக் கடற்படையினரும் வனவளத்திணைக்களத்தினரும் இணைந்து முள்ளிக்குளம் கிராமத்தை முற்றாக அபகரித்துவைத்துள்ள நிலையைக் காணக்கூடியதாகவுள்ளது.
குறிப்பாக முள்ளிக்குளம் கிராமத்தைச்சேர்ந்த தமிழ் மக்களுக்குரிய நெற் செய்கைக்குரிய காணிகள், தோட்டக் காணிகள், குடியிருப்புக்காணிகள், நீர்ப்பாசனக்குளங்கள் உள்ளடங்கலாக 1500க்கும் அதிகமான ஏக்கர்கள் வனவளத்திணைக்களத்தாலும் கடற்படையாலும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனக் குளங்களைப் பொறுத்தவரையில் சின்னத்தனக்கன் குளம், பெரியதனக்கன்குளம், பரவெளிக்குளம், பாலடிக்குளம், செட்டியார்குளம், அரக்குளம், புதுக்குளம் உள்ளிட்டவை முற்றாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன.
அதேவேளை, தமிழ் மக்களுடைய காணிகள் கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு தோட்டப் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களுக்கு 2002ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின்போது அமைக்கப்பட்டு வழங்கப்பட்ட வீடுகளில் கடற்படையினரது குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முள்ளிக்குளம் மக்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த இடங்களும் முற்றாக அபகரிக்கப்பட்டுள்ளன .
இத்தகைய சூழலில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தங்களுடைய பூர்வீகக் கிராமத்தை விடுவிப்புச் செய்வதுடன் தம்மை மீள் குடியமர்த்துமாறும் முள்ளிக்குளம் கிராம மக்கள் தொடர்ச்சியாகக் கோரிவருகின்றனர்.
குறிப்பாக தம்மை மீள் குடியமர்த்துமாறும் முள்ளிக்குளம் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் கடந்த 2017 ஆண்டு காலப்பகுதியில் இரண்டுமாத காலம் தொடர்ச்சியாக மேற்கொண்ட தொடர் போராட்டத்தின் பலனாக அப்போதைய ஆளுநர் வருகை தந்து காணிகள் விடுவிப்புச் செய்வதாக உத்தரவாதமளிக்கப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அதன் பின்னர் 77 ஏக்கர் காணிகளை விடுவிப்புச்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு காணிகளும் மக்களால் துப்புரவாக்கப்பட்டுள்ளன.
மக்களால் துப்புரவு செய்யப்பட்ட பகுதிகளைத் தீயிட்டு கொளு த்துவதற்கு கடற்படையினர் இடையூறு ஏற்படுத்தியதையடுத்து அந்தக் காணிகள் துப்புரவு செய்வதும் கைவிடப்பட்டது. இதனால் தமிழ் மக்கள் அந்தக் காணிகளில் மீள் குடியேறுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்தன .
இவ்வாறாக முள்ளிக்குளம் கிராமத்தில் மக்கள் எவரும் மீள் குடியமர்த்தப்படாத நிலையிலும் அங்கு பாடசாலை இயங்கி வருகின்றது. அங்குள்ள தேவாலயத்திற்கும் மக்கள் சென்று வருகின்றனர்.
முள்ளிக்குளம் பகுதியில் இயங்கிவருகின்ற முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் 42 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். மலைக்காட்டுப் பகுதியில் வசிக்கின்ற முள்ளிக்குளத்தை சேர்ந்தவர்களுடைய பிள்ளைகளே முள்ளிக்குளம் பாடசாலைக்குக் காலையில் சென்று மாலையில் திரும்புகின்றனர். அதேபோல், முள்ளிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பரலோகமாதா தேவாலயத்துக்கும் மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறாக தமது சொந்த இடத்துக்குச் சுற்றுலாப் பயணிகளைப் போல, சென்று வருகின்ற அவலத்தைச் சுமந்து அகதி வாழ்க்கையை முள்ளிக்குளம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தாம் வாழ்ந்த, தவழ்ந்த, விளையாடிய, பயிர்செய்த நிலங்கள் அனைத்தும் கண்முன்னே ஆக்கிரமிக்கப்பட்டு இருக்க தமது நிலத்தில் மீள் குடியேற்ற முடியாத நிலையில் உள்ள முள்ளிக்குளம் கிராம மக்களின் அகதி என்னும் அவல வாழ்வுக்கு முடிவு கட்டப்படவேண்டும். அந்த மக்கள் உடன் மீள் குடியமர்த்தப்பட வேண்டும். முள்ளிக்குளம் மக்களை மீள் குடியமர்த்துவதற்கு உரிய நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago