2025 மே 21, புதன்கிழமை

மஹிந்தவின் உயிருக்கு ஆபத்து

Kogilavani   / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவரின் பாதுகாப்புக்கு மேலும் இராணுவத்தினர் தேவைப்படுவதாக அவரின் பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக 102 இராணுவத்தினரே இருப்பதாகவும் அவர்களில் 22பேர் நிர்வாகக் கடமைகளில் ஈடுபடுபவர்கள் எனவும் அவர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட 500 இராணுவத்தினரையும் விலக்கிக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், மஹிந்தவின் பாதுகாப்புக்கு 500 இராணுவத்தினர் இருக்கவில்லை எனவும் வெலிவிட்ட கூறினார். 'இது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பரப்பட்ட வதந்தியாகும்.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் புலி உறுப்பினர்கள் 31பேரை, சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட ஆலோசனையின் கீழ், கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, கடும் நிபந்தனைப் பிணையில் செல்ல அனுமதித்திருந்தார்.
தற்போது நாட்டில், இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளனர். அவர்களில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவே புலிகளை அழித்தவராவார்' எனவும் வெலிவிட்ட கூறினார்.

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட 500 இராணுவத்தினரையும் விலக்கிக்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள அதேயளவான பாதுகாப்பை வழங்குமாறு உத்தரவிட்டிருந்தார் எனச் செய்திகள் தெரிவித்திருந்தன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்புக்கு 500 இராணுவத்தினரும் 130 பொலிஸாரும் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனினும் இதற்கான அனுமதியை பொலிஸ் தலைமையகம் மற்றும் இராணுவ தலைமையகம் ஆகியவை வழங்கியதற்கான எவ்வித ஆவணங்களும் இல்லையென சுட்டிக்காட்டி, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் கடந்த வார அமைச்சரவையில் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதிக்காக அரசாங்கம் எவ்வளவு செலவிடுகின்றது என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டமைக்கிணங்கவே, நிதியமைச்சரால் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதனடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக் குறைக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையை விரிவாக ஆராய்ந்த பின்னரே ஜனாதிபதி, மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், தேசிய பாதுகாப்பு பேரவையின் பரிந்துரைகளுக்கு அமையவே பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .