2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

“மாணவர்களுக்கு போசாக்கான உணவு திட்டம் “

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 24 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவை வழங்கும் திட்டத்துடன் தொடர்புள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அதனைச் செயல்படுத்த கொள்கை ரீதியான முடிவு எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்தார்.

இந்தத் திட்டத்துடன் தொடர்புள்ள சகல அமைச்சுக்கள்,அரச நிறுவனங்கள் மற்றும் உலக உணவுத் திட்டம் , பில் மற்றும் மிலிண்டா கேட் பௌண்டேசன் மற்றும் பாத் பைண்டர் நிறுவனம் என்பவற்றின் பிரதிநிதிகள் அடங்கலாக தொடர்புள்ள அனைத்துத் தரப்பினர்களுக்கும் இடையில் புதன்கிழமை (23) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

குறைந்த போசாக்கு மட்டமுள்ள மாணவர்களுள்ள மாவட்டங்களில் ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்காக செயற்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டத்துடன் இணைந்ததாக பாடசாலை மாணவர்களிடையே இரும்புச்சத்து குறைபாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது. கல்வி,உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு,மாகாண சபைகள்,உணவு மேம்பாட்டு சபை, உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டு செயலகம் என்பன இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.

மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு அரசாங்கம் இந்த வருடத்தில் 32 பில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளது.

தெரிவுசெய்யப்பட்ட நான்கு மாவட்டங்களில் முன்னோடித் திட்டமாக இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுவதோடு அதன் பெறுபேறு தொடர்பில் சுகாதார மற்றும் போசாக்குப் பிரிவு முன்னெடுக்கும் முறையான ஆய்வின் பின்னர் இதனை நாடளாவிய ரீதியில் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதன் ஊடாகபாடசாலை மாணவர்களிடையே இருப்புச் சத்துக் குறைபாடு மட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளதா என கண்டறிவது ஆய்வின் நோக்கமாகும்.

குறிப்பாக பாடசாலை மாணவர்களின் இரத்த சோகையை நீக்குவதற்காக, இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலத்துடன் தயாரிக்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியை ( Fortified Rice ) பாடசாலை மாணவர்களின் மதிய உணவில் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு பில் மற்றும் மிலிண்டா கேட் பௌண்டேசன் மற்றும் பாத் பைண்டர் நிறுவனம் என்பன தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க உடன்பாடு தெரிவித்தன.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, கல்விஅமைச்சின் செயலாளர் நாளக கலுவெல மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செயலாளர் மலர்மதி கங்காதரன் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X