2025 மே 10, சனிக்கிழமை

முருகனை லண்டனுக்கு அனுப்ப மறுப்பு

Mithuna   / 2023 டிசெம்பர் 19 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன் உட்பட ஏழு பேரை 2022-ஆம் ஆண்டு விடுதலை செய்ய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன் உள்ளிட்டோர் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருக்கின்றனா். இந் நிலையில், லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் சோர்ந்து வாழ விரும்புவதால், கடவுச்சீட்டு கேட்டு விண்ணப்பிப்பதற்காக திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்துக்குச் சென்று வருவதற்கு பாதுகாப்பு வழங்க, சென்னை காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் முருகன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, கொலை வழக்கில் குற்றவாளியான இலங்கையைச் சோ்ந்த முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது எனவும், இலங்கை நாட்டின் துணை தூதரகம் ஆவணங்களை வழங்கினால் மட்டுமே அந்த நாட்டுக்கும் திருப்பி அனுப்ப முடியும் என்றும் தெரிவித்தார்

தமிழக அரசு தரப்பில், திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு முருகனை அழைத்துவர காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், முருகனுக்குப் பயண ஆவணம் வழங்குவதற்கான நேர்காணலுக்கு இலங்கை தூதரகம் அழைக்கும்போது, முருகனுக்குப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X