2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

லக்கல துப்பாக்கிகள் மாயமான விவகாரம்: இரு பி.சி.க்கள் தடுப்பு; மாணிக்க வியாபாரியிடம் விசாரணை

Kogilavani   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை, லக்கல பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமற்போன துப்பாக்கிகள் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதோடு, மாணிக்கக்கல் வியாபாரி, பொலிஸ் சேவையில் ஈடுபட்ட சுமார்80 பேரிடம், இரகசியப் பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, காணாமற்போன துப்பாக்கிகள், பொலிஸ் நிலையத்திலிருந்து 3 கிலோமீற்றர் தொலைவிலுள்ள விகாரையொன்றிலிருந்து மீட்கப்பட்ட நிலையில், அவற்றில் பதிந்துள்ள கைவிரல் அடையாளங்களைப் பெறுவதற்காக, அத்துப்பாக்கிகளைக் கொழும்புக்குக் கொண்டுசென்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படாத நிலையில், லக்கல பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

லக்கலை பொலிஸ் நிலைத்திலிருந்து கடந்த வியாழக்கிழமை அதிகாலை, 6 துப்பாக்கிகள் கொள்ளையிடப்பட்ட நிலையில், அருகிலுள்ள விகாரையொன்றிலிருந்து மீட்கப்பட்டிருந்தன. இந்த விவகாரத்தில், அப்பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் துப்பாக்கிகளைக் கொண்டு ஏதேனும், படுகொலைச் சம்பவமொன்று மேற்கொள்ளப்பட்டிருக்க வாய்ப்புண்டு. இருப்பினும், மேற்படி துப்பாக்கிகளுக்கான ரவைகள் திருடப்படாமை, சாவிக்கொத்திலுள்ள 17 சாவிகளில், சரியான சாவியைத் தெரிந்தெடுக்கப்பட்டு துப்பாக்கிகள் கொள்ளையிடப்பட்டமை மற்றும் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குள் இருந்த பாகுபாடு ஆகியவை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .