2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விகாரைகளையும் கோவில்களையும் ‘கூட்டமைப்பு எதிர்க்கிறது’

Kogilavani   / 2016 நவம்பர் 17 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

“நல்லிணக்கம் என்று சொல்லிக்கொண்டு, புத்தர் சிலைகளை நிறுவுவதன் ஊடாக, மத ரீதியான தமிழர் குடிப் பரம்பலை அழிக்கும் யுத்தத்தை ஆரம்பித்துள்ளார்களா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது” என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, “புதிதாக விகாரைகள் மட்டுமல்ல, இந்து ஆலயங்கள் அமைப்பதையும் தாங்கள் எதிர்க்கின்றோம்” என்றும் கூறியுள்ளது.   

நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற, வரவு-செலவுத் திட்டம் மீதான நான்காவது நாள் விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,   

“புதிது புதிதாக அமைக்கப்படுகின்ற புத்தர் சிலைகளை, மதத்தின் பெயரால் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்பாகவே மக்கள் பார்க்கின்றனர். மக்களின் விருப்பத்துக்கு மாறாக புத்தர் சிலைகளை நிறுவி, தேசிய இனத்தின் மூலாதாரமான சமய கலாசாரத்தை இல்லாமல் செய்யும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு யுத்தம் மேற்கொள்ளப்படுகின்றது” என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.  தமிழர்கள் மீது நேரடியாக யுத்தத்தை நடத்தாமல், பாதுகாப்புத் தரப்பினரும் மகாசங்கத்தினரும் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் புத்தர் சிலைகளை நிறுவுவதன் ஊடாக மத ரீதியான தமிழர் குடி பரம்பலை அழிக்கும் யுத்தத்தை ஆரம்பித்துள்ளார்களா என்ற சந்தேகம் வலுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.   

“வடக்கில் நயினாதீவு, இரணைமடு, மாங்குளம், கொக்குத்தொடுவாய் மற்றும் அம்பாறை - மாணிக்க மடு, திருகோணமலை - ஆத்திமோட்டை, சாம்பல்தீவு, சல்லிச்சந்தி ஆகிய இடங்களில் புத்தர் சிலைகளை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.   

“புதிது புதிதாக அமைக்கப்படுகின்ற புத்தர் சிலைகளை, மதத்தின் பெயரால் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்பாகவே மக்கள் பார்க்கின்றனர்” என்றும் குறிப்பிட்டார். “இந்த இடங்களில் புதிதாக இந்து ஆலயங்கள் அமைப்பதையே நாம் எதிர்க்கின்றோம். ஏனெனில், புதிதாக ஒன்றை அமைப்பதாயின், அது அங்குள்ள மக்களின் விருப்பத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டியதாகும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.   

“தற்பொழுதுள்ள அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நிராகரிக்காதபோதும், புதிய அரசியலமைப்பிலும் இதே நிலைமை காணப்படுமாயின், அது மோசமான சூழ்நிலையையே ஏற்படுத்தும். இவ்விடயத்தில் அரசாங்கம், துணிச்சலுடன் செயற்படும் வரையில், புத்தர் சிலைகள் தமிழர் பகுதிகளில் வைக்கப்படுவதையும், அளவில் சிறிய ஏனைய தேசிய இனங்கள், அச்சத்துடன் வாழும் சூழலையும் மாற்ற முடியாது” என்றும் மத ரீதியாக மக்களை பீதியில் வைத்திருப்பதை மாற்றியமைக்க வேண்டும் சிறிதரன் எம்பி தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

“யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளபோதும் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இராணுவத்தினர், வடக்கில் தங்கியிருக்கின்றனர். இவர்கள் அங்கு விவசாயம், ஹோட்டல்துறை, மீன்பிடி என பல்வேறு தொழில்களில் ஈடுபடுவதுடன், அவற்றை அங்குள்ள மக்களுக்கு விற்பனை செய்தும் வருகின்றனர். பொதுமக்களின் ஆயிரக்கணக்கான காணிகள் இராணுவத்தினர் வசம் இருக்கும் நிலையில், அவர்கள் விவசாயம் செய்து அம்மக்களுக்கே விற்பனை செய்யும் நிலை மாற்றப்பட வேண்டும்.   

“அது மாத்திரமன்றி சிவில் பாதுகாப்புப் படையினர் முன்பள்ளிகளை நடத்தி வருகின்றனர். அங்கு கல்வி கற்கும் சிறார்களுக்கு சி.எஸ்.டி எனப் பொறிக்கப்பட்ட உடைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், இராணுவச் சின்னமும் அதில் காணப்படுகிறது. உலகத்தில் எந்த நாட்டில் இராணுவத்தினர் முன்பள்ளிகளை நடத்தி வருகின்றனர், இது ஒரு வன்முறையை தூண்டும் நடவடிக்கையாக மாறாதா, எனக் கேள்வியெழுப்பிய அவர், இராணுவத்துக்குக் கீழ் இயங்கும் இக்குழந்தைகளுக்கு, எம்மை ஆக்கிரமிக்க வந்தவர்களே இராணுவத்தினர் என்ற உணர்வில் வளர்க்கப்பட்டால், எதிர்வரும் காலத்தில் அவர்கள் ஆயுதம் ஏந்தமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது என்றும் சந்தேகத்தை வெளியிட்டார். 

“வடக்கில் மதுபாவனை அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனை ஜனாதிபதி கூட அண்மையில் கூறியிருந்தார். வடக்குக்குக் கொள்கலன்களில் கொண்டு செல்லப்படுகின்ற மதுபானத்தையே, அங்குள்ள இராணுவத்தினரும் கொள்வனவு செய்கின்றனர். மக்களின் சனத்தொகையை விட அதிகமாகவுள்ள இராணுவத்தினரின் கொள்வனவும் மதுபாவனை அதிகரிப்புக்குக் காரணமாகியுள்ளது” எனவும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .