Editorial / 2026 ஏப்ரல் 23 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
பொருள்: அவசரத் தலையீடு தேவை - சென்னை மற்றும் பிற நகரங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கானோருக்காக அவசரப் பொதுப் போக்குவரத்தை இயக்க வேண்டும்; ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், சுமூகமான வரிசை நிர்வாகத்தை உறுதி செய்யவும் வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும்.
“முழுமையான போக்குவரத்து முடக்கம் குறித்து ஆழ்ந்த கவலையுடனும் சீற்றத்துடனும் உங்களுக்கு எழுதுகிறேன். சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பிற பெருநகரங்களில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளை அடைய பேருந்துகளோ அல்லது மாற்றுப் பொதுப் போக்குவரத்தோ இல்லாமல் பேருந்து நிலையங்களில் சிக்கித் தவிக்கின்றனர்.
இது ஒரு சிறிய சிரமம் அல்ல; இது அரசின் திட்டமிட்ட தவறான திட்டமிடல் முயற்சியாகத் தெரிகிறது. போக்குவரத்துக் கழகம் மற்றும் நிர்வாகத்தின் இச்செயல்பாடானது, இந்திய அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட ‘வாக்களிக்கும் அடிப்படை உரிமை’யின் மீதான ஒரு அப்பட்டமான தாக்குதலாகும்.
தேர்தல் நாளன்று சென்னையின் கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களிலும், மற்ற இடங்களில் உள்ள முனையங்களிலும் காணப்படும் காட்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த வந்த ஆயிரக்கணக்கான குடிமக்கள், எவ்வித மாற்று ஏற்பாடுகளுமின்றித் தவிக்கின்றனர். தேர்தல் பணிக்காகப் பேருந்துகளும் வாகனங்களும் பெருமளவில் கையகப்படுத்தப்பட்டதால், சாதாரண வாக்காளர்கள் உதவியற்ற நிலையில் விடப்பட்டுள்ளனர்.
இந்த ஒருங்கிணைந்த தோல்வியானது, வாக்காளர் தொகுதியின் ஒரு பெரும் பகுதியினரின் வாக்குரிமையைப் பறிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது, அரசியலமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவின் கீழ் தேர்தல் ஆணையம் நடத்தக் கடமைப்பட்டுள்ள ‘சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்’ என்பதன் நோக்கத்தையே சிதைக்கிறது.
எனவே, இந்த இக்கட்டான சூழலில் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு, மக்கள் வாக்களிக்க ஏதுவாகப் போக்குவரத்து வசதிகளையும், வாக்குப்பதிவு நேர நீட்டிப்பையும் உறுதி செய்ய வேண்டும்,” என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
53 minute ago
1 hours ago