2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

வடக்கு, கிழக்கில் கைது செய்யும் சூழல் இருக்கிறதா: அடைக்கலநாதன் கேள்வி

Kanagaraj   / 2016 மே 05 , மு.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்படுவது தொடர்பில் அரசாங்கம் தெளிவாகச் சொன்னால் உகந்ததாக இருக்கும் என்று தெரிவித்த நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மற்றும் கிழக்கில் கைது செய்வதற்கான சூழல் இருக்கின்றதா என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கோரினார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை (04) இடம்பெற்ற நுண்நிதியளிப்புச் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த அரசாங்கத்தின் காலத்தில், நாட்டில் எங்கும் சுற்றித்திரியலாம் என்று கூறினர். எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்களிடத்தில், பெரும் அச்சம் தற்போது சூழ்கொண்டுள்ளது' என்றார்.

'மன்னாரில் சிவகரன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள், மீண்டும் கைது செய்யப்படுகின்றனர். வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவக் கெடுபிடி தலைதூக்கியுள்ளது. உயரிய சபையை பொறுத்தவரையில் அச்சமடைய வைக்கும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. உயரிய சபையில் அசிங்கங்கள் அரங்கேறுகின்றன. சண்டித்தனங்கள் காண்பிக்கப்படுகின்றன. அவைக்குள் கட்டிப்பிடித்து புரண்டுகொள்வதன் ஊடாக, பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது.

இவ்வாறான சண்டித்தனங்களால், நாடாளுமன்றம் தொடர்பில் மக்களிடத்தில் நம்பிக்கையீனங்கள் ஏற்படும். வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு வழிகாட்டுகின்றது என்று நாம் கருதும் போது, அரசாங்கம் தூரச் செல்கின்றது. கைதுகள், காணாமல் போதல்கள் தொடரக்கூடாது' என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

செல்வம் அடைக்கலநாதன் தனதுரையை ஆரம்பிக்கும்போதே, பிரதமர் உள்ளிட்ட அவையில் இருந்த முக்கிய அமைச்சர்கள் எழுந்து சென்றுவிட்டனர். எவ்வித அழுத்தமுமின்றி, அவரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசாங்கத் தரப்பிலிருந்து நேற்றைய தினம், பதிலளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X