2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வறுமையை ஒழிப்பதற்கு விசேட செயற்பாட்டுக் குழு நியமனம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 26 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வறுமையிலிருந்து விடுவிக்கும் ஆண்டாக 2017ஆம் ஆண்டு, அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்ப அணுகுமுறை மற்றும் செயற்படுத்த வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பில் மேற்பார்வைசெய்து, குறித்த செயற்திட்டங்களை அமுல்படுத்துவதற்காக, ஜனாதிபதியினால் விசேட செயற்பாட்டுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சரத் அமுனுகம அவர்களது தலைமையிலான அக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, கபீர் ஹசிம், சஜித் பிரேமதாச, தென் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வணக்கத்துக்குரிய அத்துரலியே ரதன தேரர், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் செயற்படுவார்கள்.

2017ஆம் ஆண்டை நாட்டை வறுமையிலிருந்து விடுவிக்கும் ஆண்டாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் இலங்கையில் வறுமையை இல்லாதொழிக்கும் தந்திரோபாய அணுகுமுறை தொடர்பிலான விசேட கலந்துரையாடல், நாடாளுமன்றத்தில் நேற்று (25) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அலுவலர்கள் பங்குபற்றியிருந்தார்கள். அக் கலந்துரையாடலின் போது ஜனாதிபதயினால் இக்குழு நியமிக்கப்பட்டது.

அனைத்துத் துறைகளினதும் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்களைப் பெற்று அடிப்படைத் திட்டமொன்றைத் தயாரிப்பதே இக்கலந்துரையாடலின் குறிக்கோளாகும். பிரதமர், முதலமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அலுவலர்களும் விரிவாக கருத்துகளை முன்வைத்தார்கள்.

அனைத்து விடயங்களையும் கவனத்திலெடுத்த ஜனாதிபதி, இச் செயற்திட்டம் அடிமட்டத்திலிருந்து செயற்பாட்டு ரீதியாக அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் அனைத்து மாகாண சபைகள் மற்றும் நிரல் அமைச்சுக்களும் ஒன்றுகூடி கலந்துரையாடி சுருக்கமான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் ஆலோசனை வழங்கினார்.

எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் அனைத்து அமைச்சுக்களும் இச் செயற்திட்டத்துக்குரிய செயற்பாடுகளை அமுல்படுத்த வேண்டுமெனவும், நியமிக்கப்பட்ட விசேட செயற்பாட்டுக் குழு தொடர்ச்சியாக அவற்றை ஆராய்ந்து, தேவையான ஒருங்கிணைப்பினை மேற்கொள்ள வேண்டுமெனறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

ஒரு கொள்கையுடன், ஒரு குறிக்கோளுடன் இந்த செயற்திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் வறுமைச் சுட்டியை தாழ் மட்டத்துக்கு கொண்டுவந்து வறுமையால் வாடும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக இந்த செயற்திட்டத்தை வெற்றியடையச் செய்யவேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

இச் செயற்திட்டத்தின் ஆரம்ப நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று ஜனாதிபதியின் தலைமையில் அடுத்த மாதம் நடைபெறும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .