2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வானிலை முன்னேறும்; ஆபத்து நீடிக்கிறது

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பல பகுதிகளிலும், கடந்த சில நாள்களாக நீடித்துவந்த மழையுடனான வானிலை, இன்று (08) முதல் தளர்வடையும் வாய்ப்புகள் உள்ளனவென எதிர்வுகூறியுள்ள வளிமண்டலவியல் திணைக்களம், எனினும், இன்றும் மழையை எதிர்பார்க்க முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளது.

தென்கிழக்கு அரேபியக் கடலில் ஏற்பட்ட தாழமுக்க நிலைமை, நாட்டைத் தாண்டிச் செல்லும் நிலையிலேயே, வானிலையில் முன்னேற்றம் ஏற்படக்கூடும்.

எனினும், தெற்கு, மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களில், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடுமெனவும், கிழக்கு, வடமேற்கு, ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடுமெனவும், குறிப்பாக, பிற்பகல் 2 மணிக்குப் பின்பு இந்நிலையை எதிர்பார்க்க முடியுமென, அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

தெற்கு, மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலுள்ள சில இடங்களில், 100 மில்லிமீற்றருக்கும் மேற்பட்ட, கடும் மழை பெய்யக்கூடிய சூழல் காணப்படுகிறது. அதேபோல், பதுளை மாவட்டத்தில், மணிக்கு 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வேகத்தில், கடுங்காற்று வீசக்கூடுமெனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை, தென்கிழக்கு அரேபியக் கடலில் ஏற்பட்ட தாழமுக்க நிலைமை காரணமாக, இன்றைய தினம், புயல் போன்ற நிலைமை உருவாகக்கூடுமென எச்சரித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி, மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரையோரப் பகுதிகளில், கடலில் சீற்றம் காணப்படுமென எச்சரித்துள்ளது. இதன்போது காற்றின் வேகம், மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, கடல்களுக்கு அருகில் வசிப்போரும், மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோரும், அவதானமாக இருக்குமாறு, திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் கடும் மழையுடனான வானிலைக் காரணமாக  களுத்துறை, காலி, கேகாலை, பதுளை ஆகிய  4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

அதிகூடிய மழைவீழ்ச்சி

நேற்று (7) காலை 8.30 மணியுடன்  நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் காலி- பொத்திவல பிரதேசத்தில் அதி கூடிய மழை வீழ்ச்சியாக 334.1 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .