2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வீடியோ கோல் எடுக்க அனுமதிக்குமாறு முருகன் கோரிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 28 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தந்தையின் உடலையாவது இறுதியாகப் பார்க்க தொலைபேசி வீடியோ அனுமதி வழங்க வேண்டுமென்று ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள முருகன் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் அவரின் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

இவர்கள் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. தமிழக அரசும் விடுதலை செய்யும் முடிவில் உள்ளது.

ஆனாலும், ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காத காரணத்தால் ஏழு பேரின் விடுதலையும் தாமதமாகி வருகிறது. 

இந்த நிலையில், முருகனின் தந்தை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகச் செய்திகள் வந்தன.

இதுதொடர்பாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு `மிக அவசரம்’ என்று குறிப்பிட்டு முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி நேற்று முன்தினம் இரவு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அந்தக் கடிதத்தில், “முருகன் என்கிற ஸ்ரீகரனின் தந்தை வெற்றிவேல் (75) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. தந்தையின் முகத்தைக் கடைசியாகப் பார்க்க சிறையில் உள்ள முருகனுக்கு மனிதாபிமான அடிப்படையில் வீடியோ கோல் அனுமதி வழங்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

ஆனால், அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில், முருகனின் தந்தை அதிகாலை 3.30 மணியளவில் மருத்துவமனையில் மரணமடைந்தார். 

கடைசியாகத் தந்தையின் உடலையாவது ஒரு முறை பார்க்க வீடியோ கோல் அனுமதி வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் மூலமாகச் சிறையில் உள்ள முருகனும் இலங்கையில் உள்ள அவரின் குடும்பத்தினரும் தமிழக அரசுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X