2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

“வெளிநாட்டுக் கையிருப்பை ஜே.வி.பியே இல்லாதொழித்தது”

Editorial   / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024ஆம் ஆண்டு ஒக்டோபர், நவம்பர் மாத காலப்பகுதியில் நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு உயர்வாக காணப்பட்ட நிலையில், தற்போது அந்தக் கையிருப்பு எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.இது சிவப்பு எச்சரிக்கை.அன்று சகல அபிவிருத்தி திட்டங்களுக்கும் ஜே.வி.பியே எதிர்ப்பு தெரிவித்து அனைத்தையும் இல்லாதொழித்தது. அன்று எதிர்த்த முதலீட்டுத் திட்டங்களை இன்று ஏற்கிறார்கள் இதுதான்  கர்ம வினை என ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட எம்.பி. கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (19) அன்று இடம்பெற்ற பணச் சூதாட்டத்தை  ஒழுங்குபடுத்தும் அதிகார சபைச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர்  இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன  திறந்த பொருளாதாரக் கொள்கைக்காகப்  பல வெளிநாட்டு முதலீடுகளை  நாட்டுக்குக் கொண்டு வந்தார். ஜே.வி.பி.  உள்ளடங்களாக இடதுசாரி கட்சிகள் அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டன. நாட்டின் பொருளாதார சாபத்தின் பிரதான பங்காளி ஜே.வி.பி. தான் கடந்த  கால அரசாங்கங்கள் காலத்தின் தேவையறிந்து கொண்டு வந்த சகல அபிவிருத்தி திட்டங்களுக்கும் ஜே.வி.பியே எதிர்ப்பு தெரிவித்து அனைத்தையும் இல்லாதொழித்தது. அன்று எதிர்த்த முதலீட்டுத் திட்டங்களை இன்று ஏற்கிறார்கள் இதுதான் கர்ம வினை.

 பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகார சபை ச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மத அடிப்படையில் சூதாட்டத்துக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். பொருளாதார மீட்சிக்குரிய ஒரு  முறைமையாக இதனை அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது.  பணச்சூதாட்டம் முறையாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம்.

இந்த சட்டமூலம் பல குறைபாடுகளுடன் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் பிரகாரம் ஸ்தாபிக்கப்படும் அதிகார சபைக்குத் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம்  நிதியமைச்சின் செயலாளர் மற்றும் நிதியமைச்சரால் நியமிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் முறையற்றது. இந்த அதிகார சபைக்கான நியமனம் அரசியலமைப்பு பேரவை ஊடாக வழங்கப்பட வேண்டும்.

அத்துடன், அதிகார சபைகளின் சட்டத்திட்டங்கள் மற்றும்  ஒழுங்குவிதிகளை தயாரிக்கும் அதிகாரம் நிதியமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது திருத்தப்பட வேண்டும். நிதியமைச்சரை பிரதான சூதாட்டகாரராக மாற்றும் வகையில் இந்த சட்டமூலத்தில் பல விடயங்கள் இருக்கின்றன..

சீன எக்சிம் வங்கியிடமிருந்து 500 மில்லியன் டொலர் பெற்று மத்திய அதிவேக நெடுஞ்சாலையை அபிவிருத்தி செய்வதாக ஜனாதிபதி கூறுகின்றார். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு இதுவரையான காலப்பகுதியில் 335 மில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட கடன் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன், பலதரப்பு நிதி நிறுவனங்களிடமிருந்து 95 மில்லியன் டொலர் வரையின் கடனுதவி கிடைக்கப்பெற்றுள்ளது .

சுற்றுலாத்துறை மற்றும் தேசிய தொழிற்றுறை ஊடாக வெளிநாட்டுக் கையிருப்பை  அதிகரித்துள்ளதாக அரசாங்கம் கூறுவது உண்மையல்ல. 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாத காலப்பகுதியில் நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு உயர்வாகக் காணப்பட்ட நிலையில் தற்போது கையிருப்பு எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இது சிவப்பு எச்சரிக்கை.

வெளிநாட்டுக் கையிருப்புக்களை அதிகரித்துக் கொள்வதற்கு முறையான மற்றும் நிலையான திட்டங்களைச் செயற்படுத்தாமல்  சீனாவிடமிருந்து கடன் பெற்று அதிவேக நெடுஞ்சாலையை அபிவிருத்தி செய்வதாக ஜனாதிபதி கூறுகின்றார் என்றார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X