2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வைத்தியசாலைகள் நிரம்பின; கதிகலங்கிய கல்முனை

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.ரி.சகாதேவராஜா

“நாட்டில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கல்முனைப் பிராந்திய வைத்தியசாலைகள் தொற்றாளர்களால் நிரம்பிவழிகின்றன” என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் குண. சுகுணன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்றையநாளில் மாத்திரம் 1,000 நோயாளிகள் உள்ளனர். ஆனால், இருப்பதோ 500 கட்டில்கள்தான். மிகுதி 500 நோயாளிகளும்  தரையில் அமர்ந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

“தற்போதைய நிலைமையில், ஒரு வாரத்தில் கட்டில்களின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்கவேண்டியுள்ளது. சராசரியாக தினமும் 100 தொற்றுக்களும் 2 மரணங்களும் ஏற்பட்டு வருகின்றன. தடுப்பூசி தாமதமானதன் விளைவே இது.

“எமது பிராந்தியத்திலுள்ள 07 ஆதார வைத்தியசாலைகளில் கொவிட் பிரிவுக்கென ஆக 200 கட்டில்களே உள்ளன. இடைத்தங்கல் நிலையங்களில் 370 கட்டில்கள் உள்ளன. கட்டில்கள் அனைத்திலும் நோயாளிகள் நிறைந்திருப்பதால் இடநெருக்கடி தோன்றியுள்ளது.

“குறிப்பாக, கல்முனைப் பிராந்தியத்திலுள்ள சகல கொரோனா இடைத்தங்கல் நிலைய வைத்தியசாலைகளிலுள்ள கொவிட் சிகிச்சை நிலையங்கள் அனைத்திலும் நோயாளிகள் நிரம்பிவழிவதால் சுமார் 500 நோயாளிகள் இடமில்லாமல், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

“கல்முனைப் பிராந்தியம் மீண்டும் கதிகலங்கி நிற்கும் நிலை எழுந்துள்ளது. எமது பிராந்தியத்தில் அதிக ஆபத்து நிறைந்த பிரதேசங்களாக அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, கல்முனை வடக்கு, நிந்தவூர், திருக்கோவில் மற்றும் பொத்துவில் ஆகியன அடையாளப்படுத்தப்பட்டுள்ளன” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .