2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஸ்ரீ.சு.க.வின் வெற்றிக்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்: ஜனாதிபதி

Kogilavani   / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

'ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வெற்றியை நோக்கி கொண்டுச் செல்வதற்காக கட்சியில் அங்கம் வகிக்கும் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றேன்' என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.

'அரசியலில் நான், மிக வேகமாக பயணிக்கும் ஒருவனல்ல. மிகவும் நிதானமாகவே பயணிக்கின்றேன். இனியும் நிதானமாக பயணிப்பேன். எனது கொள்கையை நான் மாற்றிக்கொள்ள போவதில்லை' என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64 ஆவது மாநாடு பொலன்னறுவை, கதுருவெலையில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'1951ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறிய எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க உட்பட்ட தலைவர்கள் இணைந்து உருவாக்கிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, இந்நாட்டை ஆட்சி செய்த பிரதான கட்சியாகும்.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த தினம் முதல், இரண்டு பிரதான கட்சிகளும் மாறிமாறி நாட்டை ஆட்சிபுரிந்த காலத்தில் நாடு முன்னேற்றம் அடைந்திருந்தாலும் அரசியல் கலாசாரம் நாளுக்கு நாள் பின்னடைவை கண்டுள்ளது.   

30 வருடங்கள் எம்மை வாட்டிய யுத்தம், எமது கட்சியின் முன்னாள் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது மகழ்ச்சியான விடயமாகும்.  

அரசியலில், இன்று புதிய சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. அதற்கு பிரதான கட்சி என்ற வகையில் நாங்கள் தயாராக வேண்டியுள்ளது' என்றார்.

'ஜனநாயகத்தை பின்பற்றும் நாடுகளில் தேர்தல் வெற்றி தோல்வி என்பது புதிதானதல்ல. ஒருமுறை தோல்வியடைந்த கட்சி அடுத்த முறை வெற்றிப்பெரும். இனிவரும் தேர்தல்களில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை, வெற்றியை நோக்கி கொண்டு செல்வதற்கு கட்சியில் அங்கம் வகிக்கும் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்.

கடந்த ஒரு வருடத்துக்குள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்ட போதும் குருநாகளை, குளியாப்பிட்டியில் இடம்பெற்ற 63ஆவது மாநாட்டின் போது மேடையில் இருந்த அனைவரும் 64 வது மாநாட்டிலும் இருப்பது ஒரு முக்கியமான விடயமாகும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .