2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

ஹிருணிகாவின் வழக்கு 13 முறை ஒத்திவைப்பு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, தெமட்டக்கொடை பகுதியில் இளைஞரொருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறும் என்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா, இன்று (24) அறிவித்தார்.

இந்த வழக்கு இன்று (24) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தமது சிரேஷ்ட வழக்குரைஞர் அஷான் பெர்னாண்டோ சுகயீனமடைந்துள்ளதால் மேலதிக சாட்சிய விசாரணைக்காக பிறிதொரு தினத்தை அறிவிக்குமாறு ஹிருணிக்கா சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் அறிவித்தார்.

அதன்போது, 2017ஆம் ஆண்டில் சாட்சிய விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதும் பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாகவும் அதனால் விரைவில் சாட்சிய விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மன்றுக்கு அறிவித்தார். 

இருதரப்பு வாதங்களையும் கருத்திற் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா, குறித்த சாட்சிய விசாரணை கிட்டத்தட்ட 13ஆவது தடவையாக ஒத்திவைக்கப்படுவதாக திறந்த நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியதுடன், நவம்பர் 16ஆம் திகதியை மேலதிக சாட்சிய விசாரணைக்கான தினமாக அறிவித்தார்.

2015ஆம் ஆண்டு டிசெம்பர் 21ஆம் திகதியன்று, ஹிருணிகா எம்.பிக்குச் சொந்தமான டிபெண்டர் ரக வாகனத்தில் வந்து தெமட்டகொட பகுதியில் வைத்து இளைஞரொருவரைக் கடத்திய சம்பவம் தொடர்பில் ஹிருணிக்கா மற்றும் மெய்ப்பாதுகாவலர்கள் உட்பட 9 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்குடன் தொடர்புடைய எண்மர் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், ஹிருணிகா எம்.பி தன்மீதான குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.  எண்மரில் ஒருவர் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர் (8ஆவது குற்றவாளி) என்பதால் அவர் விடுவிக்கப்பட்டார்.

ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் பாடசாலை மாணவர் ஒருவரைத் தவிர, குற்றத்தை ஒப்புக்கொண்ட மற்ற ஏழு குற்றவாளிகளுக்கும் 12 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், 2, 8ஆவது குற்றவாளிகள் தவிர அறுவருக்கு தலா 32,000 ரூபாய் தண்டப்பணம் விதித்ததுடன், தாக்கப்பட்ட நபருக்கு 285,000 ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் கட்டளையிடப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X