2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்காலத்திலும் தொடரும்'

Thipaan   / 2016 நவம்பர் 02 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

'வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு, அபிவிருத்தி மற்றும் நிலைபேறான அபிவிருத்திப் பணிகள் என்பன முக்கியம் என நாம் கருதுகிறோம். அவ்வாறான பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த நடைமுறைகள் எதிர்காலத்திலும் தொடரவுள்ளன' என, ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தலைவர் ஜீன் லம்பேர்ட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்துக்கு, இன்று புதன்கிழமை (02) விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண அமைச்சர்களை சந்தித்துக் கலந்துரையாடியது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையிலேயே லம்பேர்ட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 'இந்நாட்டில் சிறந்த அபிவிருத்தி ஏற்பட வேண்டுமாயின், ஜனநாயகம், நல்லாட்சி நிலவ வேண்டும். அதற்கு அரசியலமைப்பு மாற்றும் முக்கியமாகதாகும். அது தொடர்பிலும் எமது விஜயத்தில் பேசி வருகிறோம்.

எமது ஐரோப்பிய ஒன்றியத்தில் அமுல்படுத்தப்படும் 4 திட்டங்களையும் பார்வையிடவுள்ளோம். எமது மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்கப்பட்ட நிதி, இங்குள்ள மக்களுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதையும் அவதானிக்கவுள்ளோம்' என்றார்.

தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,

'நாங்கள், அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என வேலை செய்திருக்கிறோம். நடந்து முடிந்த தேர்தல் கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபட்டிருந்தோம்.

அந்தவகையில், தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ளும் நல்லிணக்கம் தொடர்பான  நடவடிக்கைகளை நாம் வரவேற்கிறோம். நாங்கள், அவர்களுடன் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவது தொடர்பாகப் பேசி வருகின்றோம்.

அதில் மனித உரிமைகள் மேம்பாடு மற்றும் தொழிலாளர் தரத்தை உறுதிபடுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடி வருகின்றோம். அது தொடர்பாக எமது நாடாளுமன்றக் குழு இறுதி முடிவுக்கு வரும் என நான் கருதுகிறேன்' என்றார்  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .