2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

'சிறந்த சுகாதார சேவையை வழங்கவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில், எம்.எஸ்.எம்.ஹனீபா

கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகள் தரம் உயர்த்தப்பட்டு சிறந்த சுகாதார சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு கிழக்கு மாகாணசபை திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபையின் அமர்வு செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றபோது, மாகாணசபை உறுப்பினர் ராஜேந்திரன்; திருக்கோவில் வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்துவது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மீது தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'திருக்கோவில் பிரதேசத்தில் தமிழ் மக்கள் வாழ்வதால், திருக்கோவில் வைத்தியசாலை தமிழ் மக்களுக்கு மாத்திரம் சேவை செய்யும் வைத்தியசாலை என்றும் நாம் யாரும் தவறாக எண்ணக்கூடாது. பொத்துவில், கோமாரி, தாண்டியடி, விநாயகபுரம், திருக்கோவில், தம்பிலுவில், தம்பட்டை கிராம மக்களுக்கான வைத்திய சேவைகளை வழங்கி வருகின்றது.

குறிப்பாக, பொத்துவில் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம், பெரும்பான்மையின மக்களுக்கும் இவ்வைத்தியசாலை பெரிதும் பணி புரிந்து வருகின்றது. கடந்த மாகாணசபை ஆட்சிக்காலத்தில் முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைரினால் கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைக்கு விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு இவ்வைத்தியசாலையை தரமுயரத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் கடந்த 03 தசாப்தகாலமாக நிலவிய யுத்த சூழ்நிலைகளால் கிழக்கில் வாழும் மூவின மக்களும் பல கஷ்டங்களை அனுபவித்தோம். அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்ந்த தமிழ், முஸ்லிம்,  பெரும்பான்மையின மக்கள் அனைவரும் ஆரம்ப காலத்திலிருந்து இன்றுவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தங்களின் சுகாதார சேவையினை பெற்று வருகின்றனர்.

அன்றைய காலகட்டத்திலிருந்து இன்றுவரை மட்டக்களப்பு வைத்தியசாலை எமது மக்களுக்கான சுகாதார சேவையினை சிறப்பாக வழங்கி வருகின்றது. இன்றைய சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேசங்களிலும் சனத்தொகை அதிகரிக்கப்பட்ட நிலை உருவாகி உள்ளதனால் எமது மக்களுக்கான வைத்தியசாலைகள் தரம் உயர்த்தப்பட்டு சகல வளங்களுடனும் இயங்க வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த 03 தசாப்தகாலமாக நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக நாம் சுதந்திரமான முறையில் வைத்தியசாலைகளுக்குச் சென்று சுகாதார சேவையினை பெறமுடியாத நிலைமை எமக்கு ஏற்பட்டது. அன்றைய சூழ்நிலையில் அரசியல் அதிகாரம் உள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்களும் பெரும்பான்மையின அரசியல் தலைவர்களும் தங்களின் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி தங்களின் பிரதேச மக்களின் நலன் கருதி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலமை ஏற்பட்டது என்பது யதார்த்தமான உண்மையாகும்.

நாம் எமது கடந்தகால நிகழ்வுகளை புரட்டிப்பார்த்தால் எல்லா சமூகங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நீண்டகாலமாக தமிழ் மக்களின் பிரதேசங்களில் அபிவிருத்திப்பணிகள் நடைபெறாமல் இருந்தன.இதற்கு யுத்த சூழ்நிலையும் ஒரு பிரதான காரணமாக இருந்தது என்பதையும் நாம் மறந்து விடமுடியாது. தற்போதைய நல்ல சூழ்நிலையைப் பயன்படுத்தி நாம் தமிழ் மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி கிழக்கு மாகாணத்தில் இன ஐக்கியத்துடன் நாம் தொடர்ந்து வாழ்வதற்கான நடவடிக்கைகளை எமது கிழக்கு மாகாண சபை முன்னெடுக்க வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .