2025 மே 19, திங்கட்கிழமை

'தொண்டர் ஆசிரியர் நியமனம் பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டும்'

Thipaan   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். முபாரக், தீசான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீத்

'இன, மத, பிரதேச, கட்சிப் பாகுபாடின்றி தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட வேண்டும்' என, ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில், நேற்று புதன்கிழமை (10) சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துதெரிவித்த அவர்,

'கிழக்கு மாகாணத்தில் பல வருடகாலமாக தொண்டராசிரியர்களாக கடைமையாற்றுபவர்களுக்கு, விரைவில் ஆசிரியர் நியமனம் வழங்க அமைச்சர் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன்மூலம் கிழக்கு மாகாணத்தில் அதிகளவில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை வேலைவாய்ப்பின்மையை ஓரளவு நிவர்த்தி செய்ய முடியும்.

ஆனால், இந்நியமனங்கள் ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டும் திருப்திப்படுத்தும் முகமாக அமைந்துவிடும் என்ற ஐயப்பாடு, கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தாலும் சிவில் அமைப்புகளாலும் வெளியிடப்பட்டுள்ளது. காரணம், கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் பல பக்கச்சார்பான நியமனங்களும் இடமாற்றங்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஆகவே, வழங்கப்படவுள்ள இந்நியமனங்கள் இன, மத, பிரதேச, கட்சிப் பாகுபாடின்றி வழங்கப்படுவதை மத்திய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசின் கீழுள்ள கல்வி அமைச்சு கிழக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்பட்டு நியமனங்களை வழங்க வேண்டும்' என்றார்.

இக்கலந்துரையாடலில், திருகோணமலை, மட்டகளப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண தொண்டராசிரியர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொண்டராசிரிய நியமனம் தொடர்பாக தமது நிலைப்பாட்டை அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், தொண்டராசிரியர் நியமனம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கையையும் தான் உடனே ஆரம்பிப்பதாகவும் இந்நியமனத்தில்  நாடாளுமன்ற உறுப்பினர், தொண்டராசிரியர் சங்க பிரதிநிதிகளின் பரிந்துரைகளை உள்வாங்கி பக்கசார்பற்ற நியமனங்களை வழங்குவதாகவும்  உறுதியளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X