2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'நிலையான அபிவிருத்திக்கு ஊடகங்களின் பங்களிப்பு இன்றியமையாதது'

Thipaan   / 2016 ஜூன் 06 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

நிலையான அபிவிருத்திக்கு ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாத காரணியாகவுள்ளது. கிராம மட்டங்களில் காணப்படும் பிரச்சினைகள், அபிவிருத்திசார் குறைபாடுகள், முன்னேற்றங்களை ஆய்வு செய்து விமர்சன ரீதியாக ஊடகவியலாளர்கள் வெளியீடுவதன்மூலம் அந்த அபிவிருத்திச் செயற்பாட்டுக்கு உதவ முடியும். இதற்கு ஊடக சுதந்திரம் இருப்பது அவசியமாகின்றது என கிழக்கு பல்கலைக்கழக சமூகவியல் விரிவுரையாளர் பகீரதி மோசஸ்  தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான, அடிப்படை உரிமைகள், சுதந்திரம் தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு, மட்டக்களப்பு தன்னாமுனையில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய  தினங்களில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நிலையான அபிவிருத்திக்கு கருத்துச் சுதந்திரம் தகவல் பெறும் சுதந்திரம் என்பன அவசியமானதாகக் காணப்படுகின்றன. அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் சிறந்த முறையில் பேணப்படுகின்றது. ஆனாலும், இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் ஊடகவியலாளர்கள் தமது பணிகளை செய்வதில் பல மட்டுப்பாடுகள், கட்டுப்பாடுகள்  காணப்படுகின்றன. அதனை அரசாங்கங்கள் மேற்கொள்கின்றன.

ஆனாலும், அபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றில், ஊடகம் என்பது மிக முக்கியமானதொன்றாகவுள்ளது. ஒரு நாட்டில் அரசியல், சட்டம், நீதி என்பன எவ்வாறு முக்கியமானதாகவுள்ளதோ, அந்தளவுக்கு ஊடகமும் மிகவும் முக்கிய பங்கை வகிக்கின்றது.

அந்த வகையில், ஊடகவியலாளர்களின் பணியும் முக்கியம் பெறுகின்றது. அவர்களது செயற்பாடும் சமூகத்தினுடைய அபிவிருத்தியை ஏற்படுத்துவதாக இருத்தல் அவசியம். ஊடகவியலாளர்களாகிய  நீங்களும், எமது நாட்டில் பல்வேறு சவால்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் பணியாற்றி வருகின்றீர்கள். பல்வேறு பட்ட கொள்கைள், கோட்பாடுகள், சவால்கள் சட்டரீதியான தடைகள் என்பன உங்களுக்கு பல மட்டுப்பாடுகளை விதிக்கின்றன. 

சகல கிராம மட்டங்களிலும் ஊடகம் தொடர்பான விழிப்புணர்வு இருப்பது அவசியமாகின்றது. அப்போது தான் பாதிக்கப்பட்ட மற்றும் குறைபாடுகளுடன் வாழும் மக்கள் ஊடகங்களுடன் தொடர்பு கொண்டு தமது பிரச்சினைகளை வெளிக்கொண்டு வர முடியும்.

இன்றைய காலகட்டத்தில் பேசப்படும் விடயங்களில் முக்கியம் பெறுவது, நிலையான அபிவிருத்தியாகும். அந்த நிலையான அபிவிருத்திக்கு ஊடகங்களின் பங்களிப்பு, செயற்பாடு மிகவும் அவசியமானதொன்றாகின்றது. தனிமனிதன் தொடக்கம் சமூகம் வரை வளர்ச்சியடைவதற்கு ஊடகம் அவசியமாகின்றது.

தனிமனிதனின் சிந்தனை செயற்பாடுகள் உள்ளிட்ட எல்லாவற்றிலும்சுதந்திரம் இருத்தல் அவசியமாகின்றது. அதற்கு அவர்களுக்கு அடிப்படையாக சுதந்திரம் இருக்க வேண்டும். அவ்வாறு சுதந்திரம் இருக்கும் பட்சத்தில்தான் அவன் தனது விடயங்களை வெளிப்படுத்துபவனாக இருக்க முடியம்.

ஒரு நிலையான அபிவிருத்தி இந்நாட்டில் ஏற்பட வேண்டுமாகவிருந்தால். ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகச் செயற்பட வேண்டும். அடிமட்ட மக்களை விழிப்படையச் செய்வதன்மூலமே அபிவிருத்தியை காணமுடியும். அந்தநிலையில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும்  பல்வேறு இடர்பாடுகள் காணப்படுகின்றன.

எமது நாட்டிலும் பல்வேறு மட்டுப்பாடுகள். கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. அவை நிலமையானது நிலையான அபிவிருத்திக்கு பெரும் சவாலக அமைந்து விடுகின்றன.

இன்றைய காலகட்டத்தில்  நிலையான அபிவிருத்திபற்றி பல்வேறு அணுகுமுறைகளை குறிப்பிடுவதனைக்காணக்கூடியாகவுள்ளன. நிலையான அபிவிருத்திக்கு என்ன செய்ய வேண்டும். என்னவிதமான சாதக பாதக நிலமைகள் காணப்படுகின்றன. அணுகுமுறைகள் உள்ளன. அதன் பலாபலன்கள் என்ன என்பது பற்றி ஊடகங்கள் கவனம் செலுத்தி மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான், மக்கள் அதனைப்பயன்படுத்தி தமது வளர்சசி பற்றி சிந்திக்க வாய்ப்பு ஏற்படும் என கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X