2025 ஜூலை 05, சனிக்கிழமை

பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் கிண்ணியாக் கல்வி வலயத்தில் பின்னடைவு

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் ஆங்கிலமொழிப் பாடத்தில் கிண்ணியாக் கல்வி வலயத்தில் மிக மோசமான பெறுபேறு கிடைத்துள்ளதுடன், கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களிலும் 17ஆவது இடத்துக்கு கிண்ணியாக் கல்வி வலயம் பின்தள்ளப்பட்டுள்ளது என அவ்வலயக் கல்வி அலுவலகத்தின் ஆங்கிலமொழிப் பாடத்துக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர்  என்.எம்.றஹ்மான் தெரிவித்தார்.

கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆங்கிலமொழிப் பாட ஆசிரியர்களுக்கான கூட்டம், அவ்வித்தியாலயத்தில் இன்று (30) நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது,'கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் கிண்ணியாக் கல்வி வலயத்தில் 1,367 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர். இந்நிலையில், ஆங்கிலமொழிப் பாடத்தில் 231 பேர் மாத்திரமே சித்தி பெற்றுள்ளனர். 1,136 மாணவர்கள்  ஆங்கிலமொழிப் பாடப் பரீட்சையில் சித்தி பெறவில்லை

இந்த வலயத்திலுள்ள 3 கோட்டங்களிலும் ஆங்கிலமொழிப் பாடப் பரீட்சையில் கிண்ணியாக் கல்விக் கோட்டத்தில் 658 மாணவர்கள் தோற்றிய நிலையில், 166 பேர் மாத்திரம் சித்தி பெற்றுள்ளார்கள். குறிஞ்சாக்கேணிக் கல்விக்  கோட்டத்தில் 444 மாணவர்கள் தோற்றிய நிலையில்,  32 பேர் மாத்திரம் சித்தி பெற்றுள்ளார்கள். முள்ளிப்பொத்தானைக் கல்விக் கோட்டத்தில் 265 மாணவர்கள் தோற்றிய நிலையில், 33 பேர் மாத்திரம் சித்தி பெற்றுள்ளார்கள்' என்றார்.  

'கிண்ணியாக் கல்வி வலயத்தில் ஆங்கிலப் பாடத்துக்கான ஆசிரியர்கள் அதிகளவில் காணப்படும் நிலையில், இந்த வீழ்ச்சியை  ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, ஆங்கிலப் பாடப் பரீட்சையில் 1,136 மாணவர்கள்; சித்தி பெறவில்லை என்றால், மாணவர்களின் பக்கம் நிச்சயமாக குறை இருக்க முடியாது. 11 வருடங்களாகக் கற்ற மாணவன்  ஒருவன் ஆங்கிலப் பாடத்தில் சாதாரண சித்தியேனும்  பெறவில்லை என்றால், அதற்குக் கற்பித்தலில் காணப்படும் குறைபாடாகவே இருக்க முடியும்.

எனவே, இது தொடர்பாக ஆசிரியர்கள் பகுப்பாய்வு செய்து, முழுமையான அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .