2025 மே 07, புதன்கிழமை

சம்பூர் மக்களை மீள்குடியேற்றுமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 28 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)

2006ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து சம்பூர் பிரதேச கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை அவர்களின் சொந்த கிராமங்களில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறுகோரும் பிரேரணை இன்று புதன்கிழமை நடைபெற்ற மூதூர் பிரதேச சபைக்கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பான பிரேரணையை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவருமான க.திருச்செல்வம் முன்மொழிந்தார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.ஹாரிஸ் வழிமொழிந்தார். சபையின் பதினொரு உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்குபற்றினர்.

இதனையடுத்து அங்கு கருத்து தெரிவித்த திருச்செல்வம், 'சம்பூரில் 500 ஏக்கரில் அனல்மின் நிலையம் அமைப்பதில் ஆட்சேபனையில்லை. ஏராளமாகக் கிடக்கும் தரிசு நிலங்களில் அனல் மின் நிலையத்தை அமைக்கலாம். அதற்காக தமிழ் மக்கள் பராம்பரியமாக வாழ்ந்து வந்துள்ள சம்பூர், சூடைக்குடா, நவரத்தினபுரம் ஆகிய கிராமங்களை உயர்பாதுகாப்பு வலயம் என்று கூறி அங்கு மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு அனுமதி மறுப்பது சரியல்ல' என்று தெரிவித்தார்.

'மீளக்குடியமர அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் இன்று கட்டைப்பறிச்சான், கிளிவெட்டி, பட்டித்திடல் மற்றும் மணற்சேனை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நலன்புரி நிலையங்களில் சொல்லொணா துயரங்களின் மத்தியில் எதிர்காலத்தை இழந்த நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள். இதற்கு ஒரு தீர்வு மனிதாபிமான முறையில் காணவேண்டும். ஆகவே இடம்பெயர்ந்த மக்கள் குடியிருந்த கிராமங்களில் அம்மக்களை மீளக்குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் திருச்செல்வம் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X