2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

'அஸ்வரின் கருத்து குறித்து அலட்டிகொள்ள தேவையில்லை'

Kogilavani   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல் பரீத்

'முஸ்லிம்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே வாக்களிப்பர் என தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் கூறிய கருத்து தொடர்பில் முஸ்லிம்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை' ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'அஸ்வருக்கு அரசியல் அரங்கில் முகவரி பெற்றுக் கொடுத்தது ஐக்கிய தேசியக் கட்சிதான். அவரைத் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குள் உள்வாங்கியதோடு மட்டுமல்லாமல் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் பதவியைக் கொடுத்து அலங்கரித்தது ஐக்கிய தேசியக்கட்சி தான்.

அது மட்டுமல்ல. அவர் தேசியப் பட்டியல் மூலம் வந்ததால் அவருக்கென்று ஒரு மாவட்டம் இருக்கவில்லை. எனவே, இக்குறையை நிவர்த்திக்கும் பொருட்டு நமது கட்சியால் புத்தளம் மாவட்டம் அவருக்குப் பொறுப்பாக வழங்கப்பட்டது. இவைதான் தேசிய மட்டத்தில் அவர் பிரபல்யம் பெற காரணமாய் அமைந்தன.

அஸ்வர் நன்றி விசுவாசம் மிக்கவர் என்பதால் அக்காலங்களில் ஐக்கியத் தேசியக் கட்சியை எங்கும் புகழ்ந்து பேசினார். கட்சித் தலைவர்களை புகழ்ந்தார். எனினும் தொடர்ந்து தேசியப்பட்டியல் மூலம் அவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் சூழ்நிலை கட்சியில் இருக்கவில்லை. அதனால் பின்னர் அவருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற  நியமனம் வழங்கப்படவில்லை.

இந்நிலையிலேயே அவர் கட்சி மாறினார். இப்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அவருக்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கியுள்ளது. அதனால் அக்கட்சியையும், கட்சித் தலைவர்களையும் தற்போது அவர் புகழ்ந்து பேசுகிறார். இது அவரது வழமையான நன்றி விசுவாசம். எனவே இது குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

இந்த அரசாங்க காலத்தில் முஸ்லிம்களுக்கு நடக்கும் அநியாயங்கள் பற்றி அவருக்கு நன்கு தெரியும். இந்த அநியாயங்களுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என்பதும் அவருக்குத் தெரியும். சொல்கின்ற அனைத்தையும் கேட்டுக் கொள்ளும் பண்பு ஜனாதிபதிக்கு உண்டு. 

இலங்கையில் சிறுபான்மையினருக்கு இன்று நடக்கின்ற உரிமை மீறல்கள் குறித்து முழு உலகுக்கும் நன்கு தெரியும். இவற்றை இங்குள்ள தமிழ், முஸ்லிம் மக்களும் நன்கு தெரிந்து வைத்துள்ளார்கள். இதனால்தான் சிறுபான்மையினரிடம் இந்த அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்கும் மனோநிலை வளர்ந்து விட்டது. இதனை இந்த அரசாங்கமும் நன்கு அறியும்.

எனவே, சிறுபான்மை வாக்குகள் தங்களுக்குத் தேவையில்லை என்ற அடிப்படையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் தன்மானமுள்ள, மனச்சாட்சியுள்ள எந்த ஒரு தமிழ் முஸ்லிம் மகனும் இந்த அரசாங்கத்துக்கு வாக்களிக்க முடியாது. இதனை மனதில் இருத்தி வரும் தேர்தலில் நமது வாக்குகளை நாம் பயன்டுத்த வேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X