2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

'கிழக்கில் நிலவிய அரசியல் ஸ்திரமற்ற தன்மை முடிவடைந்துள்ளது'

Suganthini Ratnam   / 2015 மார்ச் 04 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாணத்தில் நிலவிய அரசியல் ஸ்திரமற்ற தன்மை  என்ற இருண்டகாலம் தற்போது முடிவடைந்துள்ளது. மாகாணத்திலுள்ள அனைத்து இனங்களும்  அபிவிருத்தியில் கவனம் செலுத்துகின்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனர் என்று  கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிழக்கு மாகாண  ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'தாய்நாட்டின் சுபீட்சத்தை நோக்காகக்கொண்ட அபிவிருத்தி குறிக்கோள்களை அடைவதில் கிழக்கு மாகாணசபையும்  ஜனாதிபதியுடன் கைகோர்க்க திடசங்கற்பம் பூண்டுள்ளது.

20 வருடங்களுக்கு பிறகு 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்துக்கான  மாகாணசபை ஸ்தாபிக்கப்பட்டதை தொடர்ந்து பல உட்கட்டுமான செயற்றிட்டங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன.  வாழ்க்கைத்தரத்தை  உயர்த்துதல், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை  உருவாக்குதல் போன்ற நோக்கங்களின் அடிப்படையில் முன்கொண்டு செல்லப்பட்ட கிழக்கின் எழுச்சி மற்றும் ஏனைய அபிவிருத்தி திட்டங்கள் நியாயமானளவு வெற்றி கண்டுள்ளன.  இவை அனைத்தும் பாராட்டத்தக்க அபிவிருத்திகளாகும்.

அண்மைக்காலத்தில் ஊழல் மிகப்பிரமாண்டமாக வளர்ந்துள்ளது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றோம்.  இதன் விளைவாக வெளிப்படைத்தன்மை, சட்டவாட்சி, வகைபொறுப்புக்கூறல் போன்ற நல்லாட்சி அம்சங்கள் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

ஆட்சியாளர்களும் பொதுத்துறை அதிகாரிகளும் தேவையற்ற செலவினங்களையும் வீண் விரயங்களையும் குறைத்து அத்தகைய வளங்களை மக்களின் நலனோம்புகைக்காக பயன்படுத்துதல் என்ற வகையில் நியாயமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் செயலாற்ற வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நல்லாட்சி நடைபெறுவதினூடாக அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான தங்களது முயற்சிகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில் நான் எனது முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குகிறேன். அண்மைக்காலங்களில் கிழக்கின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க நவீனத்துவத்தை அடைந்துள்ளதுடன், தற்போது இலங்கையில் அதிவேகமாக வளர்ச்சியடைந்துவரும் மாகாணம் என்ற நற்பெயரையும் பெற்றுள்ளது.  இதனை சாத்தியப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம், சர்வதேச கொடை வழங்கும் முகவர்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பங்கு நன்றியுடன் நினைவு கூரத்தக்கது.

தங்களின் தூரநோக்குள்ள தலைமைத்துவத்தின் கீழ் அரசாங்கம் இம்மாகாணத்தின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கும் முன்னுரிமை வழங்கும் என்பது எனது நம்பிக்கையாகும். நாட்டின் செல்வ வளத்தை உருவாக்குகின்ற பயன்படுத்தாத இயற்கை வளங்களையும் கடின உழைப்புள்ள திறன்வாய்ந்த மனித வளங்களையும் கிழக்கு மாகாணம் தன்னகத்தே கொண்டுள்ளதென்பதை தாங்கள் அறிவீர்கள்.

கிழக்கு மாகாணசபை, மத்திய அரசாங்கத்தின் ஆலோசனையுடனும் ஒத்துழைப்புடனும் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு இட்டுச் செல்கின்ற கொள்கையினையும் ஒழுங்குபடுத்தும் முறைமையினையும் உருவாக்க உள்ளது என்பதனையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன். ஆகவே,  நீண்டகால அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு கிழக்கு மாகாணத்துக்கான நம்பத்தகுந்த அபிவிருத்தி அணுகுமுறை ஒன்றை பின்பற்றுவதில் எமது கவனத்தை செலுத்துவது மிக முக்கியமான அம்சமாகும்.

வறுமை, போசாக்கின்மை, தொழிலின்மை போன்ற சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு தரக்கூடிய துரிதமான பொருளாதார வளர்ச்சியை அடையக்கூடிய மூலதனம் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தினை தன்னகத்தே கொண்ட வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் முன்னேறகரமான அபிவிருத்தி முன்னெடுப்புக்களை வெளிக்கொண்டுவருவது அவசியமும் அவசரமானதுமாகும்.

கிழக்கு மாகாணசபை முதலீட்டு ஊக்குவிப்புத் திட்டமொன்றை தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது. இது கிழக்கு மாகாணசபையின் கொள்கை, முன்னுரிமைக்கு அமைவாக தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் முதலீட்டு ஊக்குவிப்புக்கான கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. முதலீட்டு செயன்முறைகளுக்கு அனுசரணை வழங்குதல், ஒழுங்கு நடைமுறைகளை கண்காணித்தல், மனிதவள அபிவிருத்தி மற்றும் உட்கட்டுமான அபிவிருத்தியை துரிதப்படுத்தல் என்பன இதில் அடங்கும்.

கிழக்கு மாகாணத்தை கவர்ச்சிகரமான முதலீட்டுத் தளமாக மாற்றுவதற்கான எமது முன்னெடுப்புகளுக்கு மத்திய அரசாங்கத்தின் உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம். கிழக்கு மாகாணம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்கு இச்சந்தர்ப்பத்தை வழங்கிய தங்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன்.

தங்களது வழிகாட்டுதலுடனும் உதவிகளுடனும் எமது மாகாணம் துரிதமான, நிலைபேறான அனைத்தும் உள்ளடங்கலான அபிவிருத்தியை நோக்கி நகரும் என்பது எனது திடமான நம்பிக்கையாகும்' என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .