2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

50 நாளில் திருமலையில் போராட்டம்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 20 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், ஹஸ்பர், அ.அச்சுதன்

"100 நாள் செயல்முனைவு" எனும் திட்டத்தின் கீழ், வடக்கு, கிழக்கு மக்களுக்கு மக்களுக்கு  கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு கிடைக்கப்பெற வேண்டுமென வட, கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தின் 50ஆவது நாள் போராட்டம், திருகோணமலை கடற்கரையில் நேற்று திங்கட்கிழமை (19) முன்வைக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு இதனை ஏற்பாடு செய்துள்ளதோடு, 50வது நாள் குரல்வழிப் போராட்டம், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை கடற்கரையில் இடம்பெற்ற போராட்டத்தில் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை பலூன்களில் பறக்கவிட்டதுடன், பட்டங்கள் விடப்பட்டு, பதாதைகளும் தொங்கவிடப்பட்டன.

அத்தோடு, வடகிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டுமென கடற்கரையில் கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் ஈடுபட்டோர், “அரசியல் கைதிகளை விடுதலை செய்”, “பேச்சு சுதந்திரம் எமது உரிமை”, “வடகிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும்”, “பயங்கரவாத சட்டத்தை நீக்கு” மற்றும் “நிலங்களை அபகரிக்காதே”, உள்ளிட்ட வாசகங்களை ஏந்தி, கோஷங்களையும் எழுப்பினர்.

சிவில் அமைப்பினர், இளைஞர்கள் என சுமார் 500 க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு 100 நாட்கள் செயல்முனைவு  தொடர்பில் அறிக்கையையும் வெளியிட்டுள்ளனர்.

அவ்வறிக்கையில், “நாங்கள் நாட்டை துண்டாடவோ, தனியரசோ கேட்கவில்லை. இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கின்றோம். வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகார பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும்.

“13ஆவது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்துக்கான உரிமையை உறுதிப்படுத்துகின்றது.

“இலங்கையில் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களாகிய நாம், ஆட்சிக்கு வந்த சிங்கள பெரும்பான்மை அரசுகளின் இனவாத கொள்கைகளால் பல்வேறு வழிகளிலும் அடக்கப்பட்டு வந்துள்ளோம். இது இன்றுவரை தொடர்கின்றது.

“இதுவே தமிழ் பேசும் மக்கள் தமக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகார பரவலாக்கும் குறித்து சிந்திக்க வேண்டிய விடயமாக வளர்ச்சியடைந்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .