2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

’ஐந்தாம் தர பரீட்சைப் பெறுபேறு; மாகாண கல்வி பின்னடைவு’

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீட்

அதிக வலயங்களில் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வீழ்ச்சியே மாகாண கல்விப் பின்னடைவுக்குக் காரணமென கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஸீ.முகம்மது முஸ்மில் தெரிவித்தார்.

ஆசிரியர் ஏம்.எஸ்.முகம்மது கைஸ் எழுதிய ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கான “தமிழ் மொழி – அடிப்படை மொழிப் பயிற்சி” நூல் வெளியீட்டு விழா, கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீது மண்டபத்தில் நேற்று (21) மாலை நடைபெற்றது. 

இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர்  இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, “நாட்டில் 99 கல்வி வலயங்கள் உள்ளன. இவற்றில் கிழக்கு மாகாணத்தில் 17 கல்வி வலயங்கள் உள்ளன. கடந்தாண்டு 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் 70 புள்ளிகளுக்கு அதிகம் பெற்ற வலயங்களின் பட்டியலில் கிழக்கு மாகாணத்தின் 11 வலயங்கள் 80ஆம் நிலைக்குப் பின்னாலேயே இருக்கின்றன. கிழக்கு மாகாணம் கடைசி நிலைக்கு வருவதற்கு இதுவே காரணம். 

“கல்வி வலயங்களின்  பெறுபேற்று சதவீதங்கள் அதிகரித்திருந்தாலும் பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்படும் பகுப்பாய்வு பட்டியலில் கிழக்கு மாகாண வலயங்கள் முன்னிலைக்கு வர முடியவில்லை. இதற்கு காரணம் ஏனைய வலயங்களின் வளர்ச்சி, கிழக்கு மாகாண கல்வி வலயங்களின் வளர்ச்சியை விட அதிகமாகும். 

“கிழக்கு மாகாண சபைக்கு வருடாந்தம் கிடைக்கும் மொத்த நிதியில் சுமார் 50 சதவீதம் கல்விக்காக செலவிடப்படுகின்றது. இது சுமார் 15 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஆகும். இதனை விட கல்வி அமைச்சால் செயற்படுத்தப்படும் “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” மற்றும் “பொதுக் கல்வியை நவீனப்படுத்தல்” போன்ற திட்டங்கள் மூலம் அதிக நிதி செலவிடப்படுகின்றது. 

“இதற்கப்பால் யுனிசெப் போன்ற நிறுவனங்கள் வருடாந்தம் அதிக நிதியை கிழக்கு மாகாண கல்வி முன்னேற்றத்துக்காக செலவிடுகின்றன. எனினும், தேசிய மட்ட தரப்படுத்தலோடு ஒப்பிடுகையில் கிழக்கு மாகாணத்தால் முன்னேற்றம் காண முடியவில்லை. 

“கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து கடந்தாண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு ஒரு மாணவர் மாத்திரம் தோற்றியுள்ளார். அதேபோல, மற்றுமொரு பாடசாலையில் இருந்து 2 மாணவர்கள் தோற்றியுள்ளனர். இவர்கள் மூவருமே 70க்கும் குறைவான புள்ளியைப் பெற்றுள்ளனர். 5 வருடங்களாக ஒரு மாணவனுக்கும், இரு மாணவர்களுக்கும் கற்பித்து குறைந்த பட்சம் 70 புள்ளியையாவது பெற வழிகாட்டப்படவில்லை. 

“இவை போன்ற விடயங்களில் கல்விப் புலத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும். நாம் எங்கே தவறு விடுகின்றோம் என்பதை இனங்காண வேண்டும். அவற்றுக்குரிய பரிகாரங்களை முன்னெடுக்க வேண்டும். இதன்மூலம், கிழக்கு மாகாணத்தை கல்வியில் முன்னேற்ற முடியும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .