Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கதிரவன், வடமலை ராஜ்குமார்
குமாரபுரம் படுகொலை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, மேன்முறையீடு செய்யுமாறு சட்ட மா அதிபரை பணிக்க வேண்டுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வேண்டுகோள் அடங்கிய கடிதமொன்றை, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள அவர், அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடிதத்தின் முழு விவரம் வருமாறு,
அதி மேதகு ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
ஜனாதிபதி அலுவலகம்,
கொழும்பு.
குமாரபுரம் படுகொலை வழக்கில் அளிக்கப்பட்ட
தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தல்
1996ம் ஆண்டில் பெப்ரவரி 11ம் திகதியில் திருக்கோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த கிளிவெட்டி எனும் கிராமத்திற்கு அருகிலுள்ள குமாரபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த 26 பொதுமக்கள் தெஹிவத்தை முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரால் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி அப்போது வெளிவந்திருந்தது. கொல்லப்பட்டவர்களில் கரப்பிணித்தாய் ஒருவரும் 16 வயதுடைய மாணவி ஒருவரும் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொல்லப்பட்டார்கள் என்பதும் செய்திகள் மூலம் தெரியவந்தது. கொல்லப்பட்டவர்களில் 6 ஆண்களும், 13 பெண்களும், 7 சிறுவர்களும் அடங்கியிருந்தனர். அத்தோடு 39 பேர் காயமடைந்தும் இருந்தனர்.
இன மோதல்களும், வன்செயல்களும் நடைபெற்ற ஒரு காலகட்டத்தில் அப்பாவிகளான இக்கிராம மக்களது உயிர்கள் அநியாயமாக பறிக்கப்பட்டமை மக்கள் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இக்கொலைகளை மேற்கொண்டதாக தெஹிவத்தை இராணுவ முகாமைச் சேர்ந்த 8 இராணுவத்தினர் மீது மூதூர் நீதி மன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது. பின்னர் திருக்கோணமலை மேல் நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது. எதிரிகளான இராணுவ வீரர்கள் தமக்கு பாதுகாப்பில்லை என்று கோரியதன் பேரில், அநுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.
நீண்ட காலமாக இழுபட்டுக்கொண்டு வந்த இந்த வழக்கு கடந்த மாதத்தில் முடிவுக்கு வந்து தீர்ப்பும் வழங்கப்பட்டது. 1996ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்குக்கான தீர்ப்பு, 20 வருடங்கள் கழிந்த நிலையில் வழங்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவத்தினர் எதுவித குற்றமும் அற்றவர்களாக தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் விமர்சிக்கக்கூடாது. அவ்வாறு விமர்சிப்பது எனது நோக்கமும் அன்று. ஆயினும், இருபது வருடங்களாக நீதியை எதிர்பார்த்திருந்த குமாரபுரம் மக்கள், இத்தீர்ப்பினால் ஏமாற்றமடைந்துள்ளார்கள். இக்கொலைச் சம்பவத்தை நேரில் கண்டவர்களும் அதிலிருந்து தப்பியவர்களுமான இக்கிராம வாசிகள் பலர், இவ்வழக்கி;ல் சாட்சிகளாக சாட்சியமளித்துள்ளார்கள். கொலையாளிகளை அடையாளம் காட்டியும் உள்ளார்கள். ஏழைகளான இம்மக்கள், தமது கிராமத்திலிருந்து அநுராதபுரத்துக்கு பல சிரமங்களின் மத்தியில் பயணம் செய்து சாட்சியமளித்துள்ளார்கள். இன்றைய நல்லாட்சியில் ஒரு நீதி கிடைக்கும் என இக்கிராமக்களும் பொதுவாகத் தமிழ் மக்களும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், இவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
சட்டமா அதிபரினால் தொடரப்பட்ட இவ்வழக்கில் அளிக்கப்பட்ட இத்தீரப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட வேண்டுமென இம்மக்கள் தங்களை வேண்டியுள்ளார்கள் என அறிகின்றேன். தாங்கள், அண்மையில் மூதூர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியை திறந்து வைப்பதற்காக வந்திருந்த வேளையில், இவ்வேண்டுகோள் தங்களிடம் விடப்பட்டுள்ளதாக பத்திரிகைகள் வாயிலாக அறிந்தேன்.
ஆகவே, இவர்களுடைய வேண்டுகோளை தாங்கள் ஏற்றுக்கொண்டு, அளிக்கப்பட்ட தீர்ப்புக்கெதிராக மேன்முறையீடு செய்யுமாறு சட்ட மா அதிபரை பணிக்க வேண்டுமென நான் தயவுடன் வேண்டுகின்றேன். எல்லா இன மக்களும் சமாதானமாகவும் அவரவர்களுக்குரிய உரிமைகளோடும் ஒன்றிணைந்து வாழவேண்டும் என்ற தங்களது விருப்பத்தையும் முயற்சிகளையும், நான் நன்கு அறிவேன். சகல இன, சமூக மக்களதும் உணர்வுகளை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
ஆகவே, குமாரபுரம் கிராம மக்களது வேண்டுகோளை ஏற்று இவ்வழக்கில் மேன்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளத் தேவையான பணிப்புரைகளை தாங்கள் விடுக்க வேண்டுமென தயவுடன் வேண்டிக் கொள்கின்றேன்.
சி.தண்டாயுதபாணி,
கல்வி அமைச்சர்,
கிழக்கு மாகாணம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
29 minute ago
2 hours ago
2 hours ago