2025 ஜூலை 31, வியாழக்கிழமை

குமாரபுரம் படுகொலை தொடர்பில் 6ஆவது நாளாகவும் சாட்சியம்

Thipaan   / 2016 ஜூலை 05 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

திருகோணமலை கிளிவெட்டி குமாரபுரத்தில் பொதுமக்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணையில், நேற்று திங்கட்கிழமை (04) ஆறாவது நாளாகவும் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டன. இதில், தங்கவேல் கோமளேஸ்வரன் (வயது 37), ஸ்ரிபன் லெட்சுமி (வயது 37) இராமையா சண்முகராசா (வயது 26) ஆகிய மூவரும் சாட்சியமளித்தனர்.

கொமளேஸ்வரனுக்கு சம்பவத்தில் காயம் ஏற்பட்டதுடன், கந்தப்போடி கமலாதேவி (வயது 48) என்ற தனது மாமியாரும் தங்கவேல் கலாதேவி (வயது 12) என்ற தனது தங்கையும் சுட்டுக்கொல்லப்பட்டதாக அவர் சாட்சியத்தின் போது தெரிவித்தார்.

ஸ்ரிபன் லெட்சுமி குறிப்பிடுகையில், தனது சகோதரி தயாளினி (வயது 04) காயமடைந்ததுடன், பத்தினி (09) என்பவர் சுடப்பட்டு இறந்ததாகவும் அவரை, கபில என்றழைக்கப்படும் இராணுவ வீரரே சுட்டதாகவும் தெரிவித்தார். இராமையா என்பவர், சுட்ட இராணுவ வீரரை, மன்றில் அடையாளம்காட்டினார்.

ஏலவே 20 பேருக்கு அழைப்பாணை விடுக்கப்படடிருந்த நிலையில், நேற்றைய விசாரணைக்கு மேலும் ஏழுபேருக்கு நீதிமன்றம் அழைப்பாணைகளை விடுத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதற்கிணங்க இவ்வழக்கு விசாரணைகளில் மொத்தம் 27 பேருக்கு சாட்சியமளிக்க அழைப்பாணை விடுக்கப்படடுள்ளது.

அவர்களில் நால்வர் இயற்கை மரணமெய்தியமையால் ஏனையவர்கள் ஆஜாராகி வருகின்றனர். இதன் படி இதுவரை 17 பேர் சாட்சியங்களை வழங்கியுள்ளனர். இவ்விசாரணைகளில் எதிரிகள் சார்பில் ஆறுபேரும் நீதிமன்றில் முன்நிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெறவுள்ள நிலையில், சாட்சியமளிக்காதோர் ஆஜாராக வேண்டுமென நீதிமன்றம் பணித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .