2025 ஜூலை 31, வியாழக்கிழமை

காணி மீட்பு ஆர்ப்பாட்டம்

Janu   / 2025 ஜூலை 29 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் விவசாயிகள் தங்களது அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்டு விவசாய செய்கை பண்ணக் கூடிய வாய்ப்புகளை வழங்குமாறு திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை (29) அன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

இலங்கை துறைமுக அதிகார சபையின் சூரிய மின் சக்தி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபகரித்த காணியை மீட்க கோரி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம் பெற்ற நிலையில் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.   

முத்து நகர் பகுதியில், சூரிய மின் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை அமைக்கும் நோக்கில், பொதுமக்களின் விவசாய நிலங்கள் அபிவிருத்தி என்ற பெயரில் அபகரிக்கப்படுவதற்கு எதிராகவே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட கால குத்தகைக்கு தனியார் கம்பெனிகளுக்கு இது வழங்கப்பட்டு தற்போது வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

அப்பகுதியில் வெளியிடப்பட்ட நிலங்கள், பல ஆண்டுகளாக விவசாயக் களமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், முந்தைய ஆலோசனைகள், உரிய தகவலளிப்பு மற்றும் மக்கள் ஒப்புதல் இல்லாமல், அரசாங்கம் முன்வைக்கும் இந்த நடவடிக்கையை மக்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும், மக்கள் உடமையை அபகரிக்காதீர்கள், சுற்றுச்சூழல் விரோத திட்டங்களை நிறுத்துங்கள் எனும் கோஷங்களை எழுப்பியதோடு, தங்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும் திட்டங்களை இடைநிறுத்துமாறு கோரிக்கை வைத்தனர்.

இதில் பல்வேறு சமூக அமைப்புகள், விவசாய சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து குரல் எழுப்பினர்.

இதன்போது மாவட்ட செயலக அதிகாரிகளுடன் கலந்துரையாடல் கோரப்பட்டதுடன்  தீர்வு எட்டப்படாவிடின் எதிர்வரும் நாட்களில் பரபரப்பான மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரப்படலாம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

350 க்கு மேற்பட்ட விவசாய குடும்பங்கள்  இங்கு வாழ்வதாகவும் . இங்கு மூன்று விவசாய சம்மேளனங்கள்  முத்து நகர்,தகர வெட்டுவான் மற்றும் மத்திய வெளி ஆகிய சங்கங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றதுடன் சுமார்  53 வருடங்களாக விவசாய செய்கை மேற்கொள்கின்ற நிலையில் தற்போது அபகரித்த காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைக்கின்றனர்.

 ஏ.எச் ஹஸ்பர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .