2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாணத்தில் டெங்கு தொற்று அதிகரிப்பு

Freelancer   / 2023 மே 11 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எப்.முபாரக் 

கிழக்கு மாகாணத்தில் டெங்கு தொற்று அதிகரித்து வருவதாகவும் சீமேந்து தொட்டியில் நீர் சேமித்து வைப்பதே டெங்கு நுளம்பின் அதிக பெருக்கத்திற்கு காரணமாக இருப்பதாகவும் கிழக்கு மாகாண தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர். எஸ்.அருள்குமரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் 17 வார காலப்பகுதிக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இதுவரை அண்ணளவாக 3,837பேர் டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதுடன், மூன்று டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளன. 

குறிப்பாக, மட்டக்களப்பு பிராந்திய சுகாதர பிரிவின்கீழ் 1,320 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மற்றும் ஏறாவூர் ஆகிய பிரதேசங்களில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் டெங்கு தொற்றுக்குள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. 

அத்துடன், கல்முனை பிராந்திய சுகாதார பிரிவின்கீழ் சுமார் 1,180 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தொற்றுக்குள்ளானவர்களின் வீதம் குறைவடைந்து காணப்படுகின்றது.

திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இதுவரை 1,261பேர் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மார்ச், ஏப்ரல் மாதங்களில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. 

அந்தவகையில், உப்புவெளி சுகாதார பிரிவில் இதுவரை 6 மற்றும் 43 வயதுடைய இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன.

நகரப்புறங்களைப் பொறுத்தவரையில் நீர் பற்றாக்குறை நிலவுகின்றமையினால் சுத்தமான நீரை மக்கள் சேமித்து வைத்து பயன்படுத்தி வருகின்றார்கள்.

குறிப்பாக, சீமேந்து தொட்டியில் சேமித்து வைக்கின்ற தெளிவான நீர் டெங்கு நுளம்பின் அதிக பெருக்கத்திற்கு உதவிபுரிகின்றது. எனவே, இது போன்ற நுளம்பு உட்புகக்கூடிய கலன்களிலோ, தாங்கிகளிலோ நீரை சேமித்து வைப்பதை மக்கள் தவிர்த்து நுளம்பு உட்புகாத பாதுகாப்பான தாங்கிகளை பயன்படுத்துவதோடு, வீட்டிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மழைநீர் தேங்கி நிற்கக்கூடிய பிளாஸ்டிக் கோப்பைகள், இளநீர் கோம்பைகள், டயர்கள், பொலித்தீன் பைகள் போன்றவற்றை அகற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .