2025 மே 05, திங்கட்கிழமை

கைகலப்பு; ஐவர் காயம்

Editorial   / 2018 நவம்பர் 22 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

கந்தளாய் வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும், மாவிலாறு விவசாயிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பில் ஐவர் காயங்களுக்குள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர்.

மாவிலாறு, பல்லேவெல பகுதியில் நேற்று (21) இடம்பெற்ற இக்கைகலப்புத் தொடர்பில் இருசாராரும் பொலிஸ் முறைப்பாடு ​பதிவுசெய்துள்ளனர் என்றும் சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்துத் ​தெரியவருவதாவது,

வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமானதென அடையாளப்படுத்தப்பட்ட வனப்பகுதியில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை, அவ்விடத்துக்குச் செல்ல வேண்டாமென, குறித்த திணைக்கள உத்தியோகத்தர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன், விவசாயிகள் செல்லும்  வீதியை மறித்து வேலியிட்டு, விவசாய நடவடிக்கைகளுக்குச் செல்ல முடியாதவாறும் உத்தியோகத்தர்கள் தடுத்துள்ளனர்.

1985ஆம் ஆண்டு தொடக்கம் அப்பகுதியில் தாங்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் யுத்தம் காரணமாக அவ்விடத்தை விட்டுச் சென்று, மீண்டும் 2009ஆம் ஆண்டு விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். 

இதனையடுத்து, கந்தளாய் வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை கைகலப்பாக மாறியுள்ளதாக, சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கைகலப்பில், கந்தளாய் வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்களான  பீ.எஸ்.என்.ஜெயசிங்க (29 வயது), டி. எம். பீ. விஐயகோன் (37 வயது) ஆகியோர் காயங்களுக்குள்ளான நிலையில், கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மாவிலாறு, பல்லேவெல விவசாய சங்கத் தலைவர் எச்.எம். டிங்கிரி பண்டா (50 வயது), என்.ஜீ.நிரோஷன் ஹேமன்த (36 வயது), ஏ. எச். திஸாநாயக்க (35 வயது) ஆகியோர், சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள், தங்களை விவசாயிகள் தாக்கியதாகவும் விவசாயிகளான தங்களை, வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள் தாக்கியதாகவும் முறைப்பாடு வழங்கியுள்ளதாக, சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த முறைப்பாடுகள் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X