2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

திருகோணமலை வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்கு ரூ.4.7 பில்லியன் ஒதுக்கீடு

Princiya Dixci   / 2016 ஜூன் 07 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பதுர்தீன் சியானா, எப்.முபாரக், பைஷல் இஸ்மாயில்

திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகளை பாரியளவில் அபிவிருத்தி செய்வதற்கான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த, மத்திய சுகாதார அமைச்சினால் 4.734 பில்லியன் ரூபாய் நிதியொதுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம், நேற்று திங்கட்கிழமை (06) தெரிவித்தார்.

இந்நிதி ஒதுக்கீட்டினை மாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீரின் ஏற்பாட்டில், சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீமின் தலைமையில், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (06) காலை 10 மணியளவில் நடைபெற்றது.

இதில், திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியா தள வைத்தியசாலைக்கு 2.414 பில்லியன் ரூபாயும் மூதூர் தள வைத்தியசாலைக்கு 1.280 பில்லியன் ரூபாயும் தோப்பூர் பிரதேச வைத்தியசாலை 435.5 மில்லியன் ரூபாயும் மற்றும் புல்மோட்டை தள வைத்தியசாலைக்கு 605 மில்லியன் ரூபாயுமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், குச்சவெளி பிரதேச வைத்தியசாலை, கோமரன் கடவல வைத்தியசாலை, பதவி ஸ்ரீபுர வைத்தியசாலை மற்றும் கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலைகளுக்கான மதிப்பீடுகளை அவசரமாக தயாரிக்கும்படி அமைச்சரினால் பணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதற்கிணங்க, இன்னும் சில தினங்களில் அவைகளுக்கான வேலைத்திட்டங்கள் முடிக்கபட்டு ஒப்படைக்கப்படும் என பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோரினால் பதில் அளிக்கபட்டது.

அவ்வைத்தியசாலைகளுக்கான மதிப்பீடுகள் கிடைக்கப்பெற்றவுடன் குறித்த வைத்தியசாலைகளுக்கான வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதியமைச்சர் பைசால் காசீம் அதன்போது தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர் மற்றும் ஜே.எம்.லாஹிர் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், பணிப்பாளர் கே. முருகானந்தம், பிரதம செயலாளர் டி.எம்.சரத் அபய குணவர்தன, முன்னாள் கிழக்கு மாகாண சபை தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ், கிழக்கு மாகாணத்திலுள்ள நான்கு பிராந்திய பணிப்பாளர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள் கலந்துகொண்டனர்.

புல்மோட்டை பிரதேச வைத்தியசாலைக்கான நிதி ஒதுக்கீடுகள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வரின் வேண்டுகோளின் அடிப்படையில் அமைச்சரின் வருகையின்போது முன்வைக்கபட்டதோடு, ஏனைய பிரதேச வைத்தியசாலைகளுக்கான வேண்டுகோள்களை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், லாகிர் மற்றும் முன்னாள் தவிசாளர் எச்.எம். பாயிஸ் ஆகியோரால் முன்வைக்கபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X