2025 மே 21, புதன்கிழமை

தமிழ், சிங்கள தொழிலாளர்களை ஒன்று சேருமாறு அறைகூவல்: ஈ.ஜ.மு

Gavitha   / 2016 மே 02 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

ஈழப்புரட்சி அமைப்பு, ஈரோஸ் ஜனநாயக முன்னணியாக மக்கள் மத்தியில் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் கொண்டாடும் முதலாவது தொழிலாளர் தினத்தன்று, இலங்கையில் வாழும் அனைத்து தமிழ், சிங்கள தொழிலாளர்கள் வர்க்கத்தையும் ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட்டு ஒன்றுபட்டு செயற்படுமாறு அறைகூவல் விடுத்துள்ளது.

சர்வதேச தொழிலாளர்கள் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை (01), இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'ஈழப்புரட்சி அமைப்பானது, ஆரம்பக் காலம் தொட்டே, மே தினத்தை மக்கள் மத்தியில் ஒரு விழாவாகக் கொண்டாடி வருகின்றது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் இந்த மே தின விழா, எமது அமைப்பின் ஏற்பாட்டின் கீழ் கொண்டாடப்படுகின்றது. 1989இல் மலையகத்தில் நடத்தப்பட்ட மே தினமானது, பிளைப்பு வாத முதலாளித்துவ கட்சிகளை அம்பலப்படுத்திய ஒரு அரசியல் எழுச்சியூட்டும் ஆர்ப்பாட்ட நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டமையானது வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும்' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

'தனி நாடு கோரி போராடிய அரசியல் கட்சிகளும் அரசியல் இயங்கங்களும், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கு காணப்பட்ட பிரச்சினையை இனப்பிரச்சினை வெறுமனே இனப்பிரச்சினையாக மாத்திரமே பார்த்தார்கள். ஆனால், எமது ஈரோஸ் ஜனநாயக முன்னணியானது, தமிழர்களுக்கு காணப்படும் பிரச்சினை ஒரு வர்க்க ரீதியான பிரச்சினை என்பதை வெளிப்படுத்தியிருந்தது' என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மேலும், '1948ஆம் ஆண்டு, பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர், முதன் முதலாக சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் படி, சுமார் 10 இலட்சம் தோட்டத் தொழிலாளர்களுடைய வாக்குரிமைகள் பறிக்கப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, 1956ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்;பு, திருகோணமலை போன்ற விவசாயத் தொழிலாளர்களுடைய விவசாய நிலங்களை சிங்கள முதலாளித்துவ அரசு பறித்து அவ்விவசாயிகளை நிர்க்கதிக்குள்ளாக்கியது.

1970ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சிங்கள முதலாளித்துவ அரசு, 1972ஆம் ஆண்டு தரப்படுத்தல் என்ற போர்வையில் மத்திய தரபாட்டாளி வர்க்க தமிழ் பேசும் மக்களின் குழந்தைகளுடைய கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வன்செயல் ஏற்பட்டு ஆயுதப் போராட்டமாக மாறின. இப்போராட்டத்தை முன்னெடுத்த அரசியல் கட்சிகள்,  இயக்கங்கள் தமிழர்களின் பிரச்சினைகளை இரு மொழி பேசுகின்ற மக்களுக்கிடையிலான பிரச்சினையாகவே பார்த்தார்கள்.

அந்த அடிப்படையில், மலையக தோட்டத் தொழிலாளர்களுடைய வாக்குரிமை பறிக்கப்பட்டமை கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் விவசாயதொழிலாளர்களுடைய விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டமை, தமிழ் ஏழை மாணவர்களுடைய கல்வியுரிமை பறிக்கப்பட்டமை, வடக்கு-கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மீனவத் தொழிலாளர்கள் கடலுக்கு சென்று தமது மீன்பிடித் தொழிலை சுதந்திரமாக மேற்கொள்ளமுடியாமல் தடுத்தமை போன்றவற்றை மையமாகப் பார்க்கின்றபொழுது, இலங்கையில் வாழ்கின்ற வடக்கு- கிழக்கு மற்றும் மலையக மக்களுடைய பிரச்சினை, இரு மொழி பேசுகின்ற மக்களுக்கிடையிலான பிரச்சினையாக மாத்திரம் பார்க்காமல், அது ஒரு வர்க்கப் பிரச்சினை என்பதையும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி பறை சாற்றி நிற்கின்றது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

'அதேவேளை, இலங்கையில் மாறிமாறி ஆட்சிஅமைக்கின்ற சிங்கள முதலாளித்துவ அரசுகள்,  சிங்கள மொழி பேசும் தொழிலாளர்களையும் தமிழ் மொழிபேசும் தொழிலாளர்களையும் ஒன்று சேரவிடாமல் பரித்தெடுத்து வருகின்றது. இந்த அரசுகள் எம்மை பிரித்து வைத்திருப்பதை காலம் தாழ்த்தியாவது, சிங்கள தொழிலாளர்கள் உணர்ந்து, எம்முடன் இலங்கைவாழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க முன்வரவேண்டும் என்பதே எமது அவாவாகும்.

சிங்கள மொழி பேசும் தொழிலாளர் வர்க்கமும் தமிழ்மொழி பேசும் தொழிலாளர் வர்க்கமும் ஒன்றிணைந்து, பொருளாதார ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியது எமது கடமையாகும். அதேவேளையில், அரசானது இம் மேதினத்தில் தொழிலாளர்களுடைய உரிமைகளை உணர்ந்து அவர்களுடைய உழைப்புக்கு ஏற்ற ஊதியங்களை வழங்கி வர்க்கபேதம், தொழில் சுரண்டல் அற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு பாடுபடவேண்டும் என்று நாம் கோருகின்றோம்' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .