2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

நீணாக்கேணிக் காணிப் பிரச்சினைக்கு குழு நியமித்து தீர்வு காண நடவடிக்கை

Suganthini Ratnam   / 2017 மே 17 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீஷான் அஹமட்

தோப்பூர் செல்வநகர், நீணாக்கேணிக் கிராமத்தில் ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சினைக்கு குழுவொன்றை நியமித்து தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.        

திருகோணமலை மாவட்டச் செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார மற்றும் சேருவில பிரதேச செயலாளர் ஆகியோரின் தலைமையில்  குழு நியமிக்கப்படவுள்ளது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்வரை அக்காணியில் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்கும் கட்டடம் நிர்மாணிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.      

செல்வநகர், நீணாக்கேணிக் கிராமத்தில் ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ தலைமையில் அவரது அலுவலகத்தில் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர், மாவட்டச் செயலாளர், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எம்.எஸ்.தௌபீக், இம்ரான் மஹ்ரூப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இரண்டு வாரகாலத்துக்குள்  இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன்,   அதுவரையில் இரண்டு தரப்பினர்களும் முரண்பாட்டில் ஈடுபடாத வகையில்  சமூகத் தலைவர்கள் செயற்பட வேண்டும் எனவும்  இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீணாக்கேணிக் கிராமத்தில் ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சினை தொடர்பில் தெரியவருவதாவது,

தோப்பூர் செல்வநகர், நீணாக்கேணிக் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் பதற்ற நிலைமை ஏற்பட்டதை அடுத்து, அங்கு பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  அக்கிராமத்தினுள் செவ்வாய்க்கிழமை நுழைந்த தேரர்கள் தலைமையிலான குழுவினர், 10 வீடுகளைப் பகுதியளவில் சேதமாக்கியுள்ளனர். இதன்போது பொதுமகன் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

நீணாக்கேணிக் கிராமத்தில் முஸ்லிம்கள் குடியிருந்துவந்த மற்றும் பயிர்ச்செய்கை மேற்கொண்டுவந்த 40 ஏக்கர்  காணியைக் கைப்பற்றுவதற்கு சேருவில பிரதேசத்திலுள்ள வில்கம் விகாரையின் விகாரதிபதியும்  இளைஞர்கள் சிலரும் இணைந்து கடந்த திங்கட்கிழமை (15) முயன்று அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  அதன்போது, காணிகளுக்கு இடப்பட்டிருந்த வேலியை அகற்றுவதற்கு முற்பட்ட வேளையில், அதற்கு மக்கள்  எதிர்ப்புத் தெரிவிக்கவே, அங்கு  பதற்ற  நிலைமை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடி தீர்வை பெற்றுக்கொள்ளுமாறு சமரசம் செய்த நிலையில் பதற்ற நிலைமை தணிந்தது. இதன் பின்னர், அக்காணிகளுக்கு செவ்வாய்க்கிழமை (16) காலை அவற்றின் உரிமையாளர்கள் வேலிகளை அடைத்தனர். இதனை  அடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு  அக்கிராமத்தினுள் நுழைந்த சுமார் 200 பேர்,  வேலிகளைச் சேதப்படுத்தியதுடன், வீடுகளையும் பகுதியளவில் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் காரணமாக அச்சமடைந்த மக்கள், தங்களின் வீடுகளிலிருந்து அன்றையதினம் இரவு வெளியேறி, பள்ளிவாசல் மற்றும் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்திருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்,   கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும்  இராணுவ கட்டளைத் தளபதியுடன் கலந்துரையாடியமைக்கு அமையவும்  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தனவிடம் தெரியப்படுத்தியமைக்கு அமையவும் பொலிஸாரின் உதவியுடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்புக்காக பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .